
ஒரு தேடலில் பிரத்யேக உலகுக்குள் நுழையும் ஒரு கூட்டம், வழியில் நீர், நெருப்பு, விஷப் பாம்புக் கூட்டம் என நிறையத் தடங்கல்கள் என செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனை நினைவுப்படுத்தும் வகையில் வந்திருக்கிறது தங்கலான்.
பா. இரஞ்சித், விக்ரம் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் தங்கலான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடுமையான உழைப்புக்குப் பிறகு இந்தப் படம் வெளியாகியிருக்கிறது. படத்தின் கதை 18-ம் நூற்றாண்டில் வட ஆற்காட்டில் நிகழ்கிறது. விக்ரம், பார்வதி குடும்பம் உள்பட ஒடுக்கப்பட்ட மக்கள் இந்தக் கிராமத்தில் வேளாண் தொழில் செய்து வசித்து வருகிறார்கள்.
மறுபுறம் தங்க வளம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, அதைத் தோண்டி எடுக்க வேண்டிய சூழல் ஆங்கிலேயர்களுக்கு ஏற்படுகிறது. இதற்காக உழைக்கும் மக்களான விக்ரம் மற்றும் இவரது ஊர் மக்கள் உடன் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தங்கத்தை நோக்கிய இந்தப் பயணத்தில் இவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? இறுதியில் தங்கம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து தங்கத்தைத் தோண்டி எடுத்தார்களா இல்லையா என்பதுதான் தங்கலான் படத்தின் கதை.
தங்கலான் கதாபாத்திரமான விக்ரமின் தலைக்குள் ஏற்கெனவே தங்கத்தை நோக்கிய ஒரு பயணத்தின் கட்டுக்கதை இருப்பதுண்டு. இந்தக் கட்டுக்கதையில் நிகழும் சம்பவங்கள், தங்கம் நோக்கிய பயணத்தோடு ஒத்துப்போவது சற்று சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. மேலும், பயணத்தில் இடர்பாடுகளாக வைக்கப்பட்டுள்ள தடங்கல்கள் மற்ற அம்சங்களை மறக்கடிக்கக் கூடியதாக இருந்தன.
படத்தில் உள்ள குறைகளை மறைப்பதற்கு இந்தக் காட்சிகள் உதவின. இந்தக் காட்சிகளுக்கு தன்னுடையப் பின்னணி இசை மூலம் ஜி.வி. பிரகாஷ் உதவியிருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் நினைவுகள் நிச்சயம் எழலாம்.
18-ம் நூற்றாண்டில் வடஆற்காடு கிராமத்தில் நிகழும் கதை உலகம் மற்றும் கதாபாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்குள் நிகழும் உரையாடல்கள், உணர்வுப் பரிமாற்றங்கள், இவர்களுக்காக எழுதப்பட்ட வசனங்கள் என பல விஷயங்கள் சுவாரஸ்யமாக வந்துள்ளன. நடிப்பிலும் பார்வதி, பசுபதி ஆகியோர் மிளிர்கிறார்கள். குறிப்பாக, பசுபதி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம், இவருக்கான வசனங்கள், இவருடைய உடல்மொழி என அனைத்தும் திரையரங்கில் சிரிப்பலையை உண்டாக்குகின்றன.
ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக எழுதப்பட்ட வசனங்கள், ஆதிக்கம் செலுத்தும் மிராசுதார் முன்பு சரிசமமாக எழுச்சி நாயகனாக நிற்பது என பா. இரஞ்சித் படங்களில் தொடர்ச்சியாக வரும் புரட்சிகர 'மாஸ்' தருணங்கள் இந்தப் படத்திலும் சரியாக அரங்கேறியிருக்கின்றன. வரலாற்றுக் கதைக் களத்தைக் கொண்டிருப்பதால், பூர்வகுடி மக்களிடமிருந்து நிலம் பறிப்பு, பௌத்த மதம் இருட்டடிப்பு ஆகியவற்றை தங்கலான் கதைக்குள் புனைவாகப் புகுத்தியிருக்கிறார்.
இருந்தபோதிலும், வழக்கமான பா. இரஞ்சித் படங்களில் இருக்கும் கதாபாத்திரங்களின் ஆழமான விவரிப்பு தங்கலானில் தடுமாறுகிறது. காட்சியில் சுவாரசியத்தைக் கூட்டுவதற்கான இடங்களில் மட்டுமே கதாபாத்திரங்கள் மிளிர்கின்றன. மிகக் குறிப்பாக கதையின் முக்கியக் கதாபாத்திரமான ஆரத்தி (மாளவிகா மோகனன்). இவர் படத்தில் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார், அதுவும் சண்டைக் காட்சிகளில். எனவே, இவருடையக் கதாபாத்திர விவரிப்பு படத்தில் பெரிதாக இல்லை. இவரைச் சுற்றியே இறுதிவரை கதை நகர்ந்தபோதிலும், இறுதியில் ஒரு திருப்புமுனையாக இவர் இருந்தபோதிலும் இவருடைய உலகம் சரியாக விவரிக்கப்படாமல் இருந்தது பெரும் குறையாக இருந்தது. இதனால், கிளைமாக்ஸ் திருப்புமுனையில் பெரிய 'கூஸ்பம்ப்' உணர்வு எழவில்லை.
ஆனால் உழைப்பைச் செலுத்த விரும்பும் விக்ரமுக்கு சரியான களமாகவும், இவரது நடிப்புக்கும் சரியான கதாபாத்திரமாகவும் தங்கலான் இருக்கிறது.
மொத்தத்தில் இரண்டரை மணி நேர திரைப்படம் நன்றாக இருந்ததா இல்லையா என்றால், அடுக்கடுக்கான சண்டைக் காட்சிகளால் நிரப்பி, நல்ல பின்னணி இசையில் மெருகேற்றி குறைவான உணர்வுகளைக் கடத்தும் ஒரு திரைப்படமாக தங்கலான் தங்க நிலத்தை மீட்டெடுக்கிறான்.
தடைகளைத் தகர்த்து ஆஸ்கருக்குச் செல்வாரா?? வாய்ப்புகள் குறைவு என்பதுதான் நிதர்சனம்.