கில்லி வெளிவந்து 20 வருடங்கள்: விஜயின் பாட்ஷா!

காதல் படங்களை குறைத்துக்கொண்டு ஆக்‌ஷன் படங்களில் மட்டும் விஜய் நடிப்பதற்கு கில்லியின் மாபெரும் வெற்றி முக்கியக் காரணம்.
கில்லி வெளிவந்து 20 வருடங்கள்: விஜயின் பாட்ஷா!

ஒரு படத்தை வெற்றி பெற வைக்க எனக்குத் தெரியும்.

தூள் பட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் தரணி இதுபோல பேட்டியளித்தார். இதைச் சொல்வதற்கு அவருக்கு முழுத்தகுதியும் இருந்தது.

2001-ல் ஆரம்பித்து அடுத்த மூன்று வருடங்களில் தில், தூள், கில்லி என மூன்று சூப்பர் படங்களை அளித்திருந்தார். 2004, ஏப்ரல் 17, சனிக்கிழமையன்று வெளியானது கில்லி படம். ஒக்கடு என்கிற தெலுங்குப் படத்தின் ரீமேக். பகவதி, திருமலை என அதற்கு முன்பு விஜய் நடித்த ஆக்‌ஷன் படங்கள் ஓரளவு வெற்றி பெற்றாலும் கில்லி படம் விஜய்யின் புகழை ஒரே நாளில் உயர்த்தியது. விஜய்யின் திரையுலக வாழ்க்கைக்கு எப்படி பூவே உனக்காக மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதோ அதேபோல கில்லி, விஜய்யை சூப்பர் ஸ்டார் நிலைக்குக் கொண்டு சென்றது. 90களில் பார்த்த விஜய் அல்ல இவர் என்கிற புதிய அடையாளத்தை அளித்தது. *

மகேஷ் பாபு நடித்து ஹிட் ஆன ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக் உரிமையும் விஜய்யின் கால்ஷீட்டும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்திடம் இருந்தன. ஒக்கடு படம் பார்த்த விஜய், இதை தரணி ரீமேக் செய்வாரா என்று ரத்னத்திடம் கேட்டுள்ளார். ஒக்கடு படம் பார்த்த தரணியும் ரீமேக்குக்குச் சம்மதம் அளித்தார். ஆனாலும் ஹைதராபாத் சென்று இந்தப் படத்துக்குக் கிடைக்கும் வரவேற்பு, இயக்குநரின் கருத்துகளை அறிய விரும்பியுள்ளார். எல்லாவற்றையும் முழுவதுமாகத் தெரிந்துகொண்ட பிறகுதான் விஜய்யிடம் கதை சொல்லியுள்ளார்.

இயக்குநர் தரணி வசம் மூன்று கதைகள் இருந்துள்ளன. கபடிக் கதை, லைட்ஹவுஸில் ஒளிந்திருக்கும் கதாநாயகி பற்றிய கதை, சேஸிங் காட்சிகள் கொண்ட ஒரு கதை. இந்த மூன்றுமே ஒக்கடுவில் இருந்ததால் ரீமேக் செய்ய முடிவெடுத்தார்.

ரீமேக் தானே செய்யப் போகிறோம். எதற்காகக் கதையெல்லாம் சொல்கிறீர்கள் என்று கதை சொல்லப் போன தரணியிடம் கேட்டுள்ளார் விஜய். ஆனால் படம் பார்த்துவிட்டு தனக்குத் தோன்றிய மாற்றங்களையெல்லாம் கூறியுள்ளார் தரணி. முக்கியமாக ஒக்கடு படத்தில் இடம்பெற்ற இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளை மாற்றினார் தரணி. இந்த மாற்றங்கள் பிடிக்கவில்லையென்றால் ஒக்கடு கதையை யாரை வைத்து வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்றும் பேசியுள்ளார். விஜய்க்கு தரணி சொன்ன மாற்றங்கள் பிடித்ததால் தொடங்கியது கில்லி படப்பிடிப்பு.

கபடிக் காட்சிகள் நிறைய வருவதால் நிறைய கபடி ஆட்டங்களை நேரில் சென்று பார்த்துள்ளார் விஜய்யும் தரணியும். கபடி ராஜேந்திரன், குணசேகரன் என இரு பயிற்சியாளர்கள் விஜய்க்கும் அவருடைய நண்பர்களுக்கும் கபடி தொடர்பான பயிற்சிகளை விஜயா வாகினி ஸ்டூடியோவில் தினமும் அளித்துள்ளார்கள்.

மதுரை மீனாட்சி கோயிலில் எடுக்கப்பட்ட காட்சியை மிகவும் ரகசியமாக, மதுரை விஜய் ரசிகர்களுக்கே தெரியாமல் எடுத்துள்ளார்கள். அந்தக் காட்சியை எடுக்கும்போது கூட்டம் சேர்ந்துவிட்டால் காட்சியின் அழகே கெட்டுவிடும் என்பதால் இந்த ஏற்பாடு.

ஒக்கடு படத்தில் உள்ள பிரகாஷ் ராஜின் முத்துபாண்டி கதாபாத்திரத்தைத் தமிழில் ஓரளவு மாற்றியிருப்பார் தரணி. சாதாரணமாக தரணி சொல்லச் சொன்ன, ஹாய் செல்லம் என்கிற வசனத்தைத் தனது பாணியில் சொல்லி, அதையே முத்திரை வசனமாக மாற்றிவிட்டார் பிரகாஷ் ராஜ். ஒக்கடுக்கு எப்படிச் சிறப்பு சேர்த்தாரோ அதேபோல கில்லியிலும் அசத்தி, தன்னிகரற்ற வில்லனாக பிரகாஷ் ராஜ் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட மற்றொரு படம் - கில்லி.

வழக்கமான கதாநாயகி வேடம் கிடையாது த்ரிஷாவுக்கு. படம் முழுக்க ஓடவேண்டும், சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என அதிக உழைப்பைச் செலுத்த வேண்டியிருந்தது. கில்லியில் விஜய்க்கு அற்புதமான ஜோடியாக அமைந்தார் த்ரிஷா. இதற்குப் பிறகு அடுத்த நான்கு வருடங்களில் மூன்று படங்களில் இருவரும் ஒன்றாக நடித்தார்கள்.

ஒக்கடுக்கும் கில்லிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் - நகைச்சுவைக் காட்சிகள். விஜய்யின் நண்பர்கள், விஜய் தங்கை, அம்மா கதாபாத்திரங்களால் படத்தில் ஏராளமான நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெற்றன.

விஜய்யின் நண்பராக ஓட்டேரி நரியாக நடித்து அசத்தியவர் தாமு. ஒக்கடு படத்தில் இந்தக் கதாபாத்திரம் கிடையாது. அப்போது ஜேஜே படத்தில் நடித்து வந்த தாமு, நீளமாக முடியை வளர்த்து வந்தார். அதைப் பார்த்த தரணி, ஹேர் ஸ்டைலிஸ்டை வைத்து தலைமுடியை வாரி இரண்டு பின்னல் போட்டு நடுவில் ஒரு குச்சியை சொருக வைத்துள்ளார். சென்னையில் ஓட்டேரி நரி என்கிற பெயரில் ஒருவர் வாழ்ந்துள்ளார். அவரைப் போல நான் இருக்கிறேன் என தன்னுடைய புதிய ஹேர்ஸ்டைலைப் பார்த்து தாமு கூற அதுவே அக்கதாபாத்திரத்தின் பெயராகிவிட்டது. விஜய்யுடன் பல படங்களில் நடித்தாலும் இந்தப் படத்தில் நடித்த பிறகு என்னை எங்குப் பார்த்தாலும் நரி என்றே அழைக்கிறார் விஜய் என்கிறார் தாமு.

தரணி இயக்கிய தில், தூள் படங்களுக்கு வசனம் எழுதியவர் இயக்குநர் பரதன். கில்லியிலும் வசனம் எழுதினார். தரணியும் பரதனும் ஹைதரபாத் சென்று ஒக்கடு படத்துக்கு எங்கெல்லாம் கைத்தட்டல்கள் கிடைக்கின்றன என்று கவனித்து பிறகு இயக்குநரிடம் பேசிவிட்டு பிறகுதான் கில்லி படத்துக்குக் கதை எழுதினார்கள். அப்புல இருக்கிறவன் டவுன்ல வரதும், டவுன்ல இருகிறவன் அப்புல வரதும் ஒன்னும் பெரிசு இல்லை. எதிரியை எப்படி ஆப்பு வைச்சிட்டு ஜெயிக்கிறதுதான் மேட்டரு..., தம்மாதுண்டு பிளேடு மேல வைக்கிற நம்பிக்கைய உன் மேல வை... போன்ற வசனங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. கில்லி படத்துக்குப் பிறகு விஜய் நடித்த மதுர படத்துக்கும் பரதன் தான் வசனம் எழுதினார். அடுத்ததாக விஜய் நடிப்பில் அழகிய தமிழ் மகன், பைரவா என இரு படங்களை இயக்கினார்.

அது ஒரு வித்யாசகர் காலம். தில் படத்தின் வெற்றிக்குப் பிறகு வித்யாசகர் பாடல்களுக்கு அதிக கிராக்கி இருந்தன. இந்தப் படத்தில் பாடல்கள் மூலம் படத்துக்கு மேலும் சுவாரசியத்தைக் கூட்டினார் வித்யாசகர். அப்படிப் போடு பாடல், படத்தை எங்கேயோ கொண்டு சென்று நிறுத்தியது. பின்னணி இசையிலும் தன் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்தார் வித்யாசகர்.

2001-ல் வெளியான ப்ரண்ட்ஸ் படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு இன்னொரு பெரிய வெற்றிக்காகக் காத்திருந்தார் விஜய். கில்லிக்கு முன்பு புதிய கீதை, உதயா என மோசமான தோல்விப் படங்களில் நடித்திருந்தார். அத்தனைக் காயங்களையும் கில்லி போக்கியது. இதன்பிறகு காதல் படங்களைக் கிட்டத்தட்ட அடியோடு குறைத்துக்கொண்டு ஆக்‌ஷன் படங்களில் மட்டும் விஜய் நடிப்பதற்கு கில்லியின் மாபெரும் வெற்றி முக்கியக் காரணம்.

கில்லி படத்தின் இன்னொரு சிறப்பம்சம் - கதையைத் தாண்டி வேறு எந்தப் புரட்சிகரமான கருத்துகளும் வசனங்களும் படத்தில் இருக்காது. பிரகாஷ் ராஜிடமிருந்து த்ரிஷாவை விஜய் மீட்பதைத் தவிர வேறு எந்த அரசியல் வசனங்களோ சமூகத்தைத் திருத்தக் கூடிய காட்சிகளோ இல்லாத ஒரு படமாக ஜொலித்தது கில்லி.

கில்லி படத் தலைப்பை ரஜினியிடம் தரணி சொல்லியிருக்கிறார் தரணி. படத்தின் பாதி வெற்றி தலைப்பிலேயே உள்ளது என்று பாராட்டியிருக்கிறார் ரஜினி. படத்தைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ், இதுபோல ரீமேக்கில் காட்சிகளை மாற்றுவதற்குத் தைரியம் வேண்டும். தவறாக ஆகியிருந்தால் உன் வாழ்க்கையே வீணாகியிருக்கும் என்று தரணியைப் பாராட்டினார்.

ரஜினி நடித்த படையப்பா படத்தின் வசூல் சாதனைகளைப் பின்னுக்குத் தள்ளியது கில்லி. தமிழ்ப் படங்களில் முதல்முதலாக ரூ. 50 கோடி வசூலித்ததும் கில்லி தான்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in