பிக் பாஸில் கமலுக்குப் பதில் விஜய் சேதுபதி: வெளியானது ப்ரமோ
பிக் பாஸ் 8-ல் இருந்து கமல்ஹாசன் விலகியதைத் தொடர்ந்து, இவருக்குப் பதில் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.
இதுதொடர்புடைய ப்ரமோ காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
2017 முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. விஜய் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இது ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை முதல் சீசனிலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார். கரோனா தொற்று காலத்தில் சில வாரங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இடையில் 24 மணி நேரம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில் மூன்று பெரிய படங்களின் பணிகள் இருப்பதால், வரவிருக்கும் பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கமல்ஹாசன் கடந்த ஆகஸ்ட்டில் அறிவித்தார். கல்கி 2, இந்தியன் 3, தக் லைஃப் என மூன்று பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருவதால் பிக் பாஸ் சீசன் 8-ல் இருந்து விலகுவதாக அவரே அறிக்கையை வெளியிட்டார்.
இவருடைய அறிவிப்பைத் தொடர்ந்து, நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ரம்யா கிருஷ்ணன், சிம்பு மீண்டும் தொகுத்து வழங்குவார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்தன. சரத்குமார், விஜய் சேதுபதி ஆகியோரது பெயர்களும் அடிபட்டன.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 8-ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். இதுதொடர்புடைய ப்ரமோ அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.