
வெற்றி மாறனின் விடுதலை முதல் பாகம் கடந்தாண்டு வெளியானது. முதல் பாகத்தில் சூரியை (குமரேசன்) மையப்படுத்தி இருந்த கதை, இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியை மையப்படுத்தி வந்துள்ளது. விடுதலை 1-ல் சூரி தனது தாய்-க்கு எழுதிய கடிதத்தின் வாயிலாக கதையை நகர்த்திச் செல்வார். விஜய் சேதுபதி (வாத்தியார் | பெருமாள்) கைது செய்யப்படுவதில் முதல் பாகம் முடியும். அதே இடத்திலிருந்து சூரியின் பார்வையில் இரண்டாம் பாகம் தொடர்கிறது.
வாத்தியார் என்பவர் யார்? அந்தக் கதாபாத்திரம் பேசும் அரசியல் என்ன? அந்தக் கதாபாத்திரம் எதற்காக அரசியல் பேசுகிறது? ஊர் மக்கள் வாத்தியாரைப் பாதுகாப்பது ஏன்? இந்தக் கேள்விகளுக்கான விடை தான் விடுதலை 2.
படத்தின் முதல் பகுதி முழுக்க, இடதுசாரி அரசியலின் வீச்சு கோலோச்சுகிறது. இடதுசாரி சிந்தனை என்றால் என்ன? அந்தச் சொல்லின் பின்னணி என்ன? என்று தொடங்கி கம்யூனிஸ சிந்தனையின் அடிப்படையிலிருந்து வகுப்பு எடுத்திருக்கிறார் வெற்றி மாறன். ஒரு கம்யூனிஸ செயற்பாட்டாளரின் வாழ்க்கையைப் பிரதி எடுத்து, அதில் நிகழும் போராட்டங்கள், தத்துவங்கள் என அனைத்தையும் மிகக் கச்சிதமாகக் கண்முன் காட்டியிருப்பதில் வெற்றி மாறன் வெற்றி கண்டிருக்கிறார். சில இடங்களில் வசனங்கள் வெட்டப்பட்டுள்ளன, இடதுசாரி கொடிகள் மறைக்கப்பட்டுள்ளன என்பதுதான் ஒரு குறை.
கருத்தியல் பேசியதில் பிழை இல்லை. ஆனால், பேசிய விதம்தான் பின்னடைவாக அமைந்துவிட்டது.
முதல் சிக்கல்:
படத்தின் மூலக் கதை, அந்த ஊர் பற்றியது. மலைக் கிராமத்தில் வசிக்கும் மக்களை அங்கிருப்பது அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் நோக்கம். காரணம், அங்கிருந்து மக்களை அப்புறப்படுத்திவிட்டால் அங்கு சுரங்கத்தை அமைக்கத் தடை இருக்காது. மக்களை அப்புறப்படுத்தவே அங்குள்ள மக்கள், காவல் துறையால் துன்புறுத்தப்படுகிறார்கள். மக்களுக்கு ஆதரவாக இயங்கி வரும் விஜய் சேதுபதி மற்றும் அவருடைய இயக்கம் தலைமறைவாக இருந்து அரசுக்கு தலைவலி கொடுத்து வருகிறது.
இதனால், மக்கள் எந்தளவுக்குத் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பதை மிகவும் ஆழமாக முதல் பாகத்தில் விவரித்துவிட்டார் வெற்றி மாறன்.
இரண்டாம் பாகத்தில் ஆட்சியாளர்களின் சூழ்ச்சி என்ன என்பது பார்வையாளர்களுக்கு ஆழமாகக் கடத்தப்பட்டிருக்க வேண்டும். அதைக் கடத்துவதற்குச் சரியான கதாபாத்திரமாக விஜய் சேதுபதி இருந்தார். இந்தப் பிரச்னையை மையப்படுத்தி விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தால், அது கதையோடு பின்னியிருக்கும்.
விடுதலை 2-ல் நடந்தது, விஜய் சேதுபதி எனும் இடதுசாரி சிந்தனை கொண்ட செயற்பாட்டாளரின் வாழ்க்கை வரலாறு. எனவே, கதையிலிருந்து சற்று நகர்ந்து விஜய் சேதுபதியின் பின்னணியை நோக்கிச் செல்கிறது படம். பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியராக இருக்கும் ஒரு வாத்தியார் எதற்காக இடதுசாரி அரசியல் சித்தாந்தைப் பேசுகிறார்? என்ற கேள்வியெழுகிறது. இதற்காகவே கென் கருணாஸ் (கருப்பன்) கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தக் கதாபாத்திரத்துக்கு நிகழும் துயரத்திலிருந்து விஜய் சேதுபதியின் பாதை மாறுகிறது.
அதுமட்டுமின்றி இடதுசாரி பக்கம் ஈர்க்கப்படும் விஜய் சேதுபதி, ஒரு கட்டத்தில் இடதுசாரி சித்தாந்தை அடிப்படையாகக் கொண்டு ஆயுதக் குழுவாக ஒரு அமைப்பை உருவாக்கி அதற்குத் தலைவாகிறார். இதை ஏன் செய்கிறார் என்பதற்கு ஒரு சில நிகழ்வுகள் படத்தில் உள்ளன.
ஒருவருடைய வாழ்க்கை வரலாறாக ஒரு கதை உருவாகும் போது, இதுமாதிரியான ஆழமான விவரிப்புகள் அவசியம்தான். அதுவும் மக்களுக்குத் தேவையான முக்கியமான அரசியலை பேசும்போது ஆழமாக விவரிப்பது ஒரு பொறுப்பும்கூட. ஆனால், விடுதலை 2-ன் மூலக் கதையைத் தாண்டி இது தனித்த பெரிய உலகமாக இருப்பதுதான் பிரச்னை.
இரண்டரை மணி நேரத்தில் ஒரு கதையைச் சொல்லும்போது, மூலக் கதைக்குத் தேவையான அளவுக்கு, அதிலிருந்து விலகிடாதவாறு பின்னுட்டங்களைச் சேர்க்க வேண்டும்.
தலைமைச் செயலாளராக வரும் ராஜீன் மேனன் படத்தில் நிறைய சூழ்ச்சிகளைச் செய்கிறார். அவை மிகவும் சுவாரஸ்யமாக வந்திருக்க வேண்டியது. காரணம், படத்தில் விஜய் சேதுபதி ஒரு சித்தாந்தத்தின் பிரதிநிதி என்றால், எதிர்நிலையில் அதிகாரத்தின் பிரதிநிதி ராஜீன் மேனன் கதாபாத்திரம். இவர் செய்யும் சூழ்ச்சியைக் கூடுதல் நேரம் செலவிட்டு பார்வையாளர்களிடத்தில் கடத்தியிருந்தால், முதல் பகுதி கூடுதல் சுவாரஸ்யம் அடைந்திருக்கும். படத்தில் அட்டகாசமான ஒரு அரசியல் விளையாட்டு நிகழ்ந்திருக்கும்.
ஆனால், அதிகாரத்தின் தரப்பை ஆழமாக விவரிப்பதற்குப் போதிய நேரம் இல்லாமல் போனதற்கும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் வாழ்க்கை வரலாறாகக் கதை மாறியது ஒரு காரணம்.
இரண்டாவது சிக்கல்:
விஜய் சேதுபதியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக பேசுவது என்று முடிவெடுத்த பிறகு, அதில் நிறைய முரண்களுடன் கூடிய நாடக அம்சங்களை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், படம் முழுக்க வசனங்கள்தான் நிறைந்திருக்கிறது.
வசனங்கள் அனைத்தும் சமூகத்துக்குத் தேவையான மிக முக்கியமான தத்துவங்களைக் கொண்டிருந்தாலும், ஒரு கட்டத்துக்குப் பிறகு வசனங்கள் வாயிலாகவே கதை நகர்வதால், அரசியல் வகுப்பில் அமர்ந்திருப்பதைப் போன்ற ஓர் உணர்வு வந்துவிடும். மேலும், விஜய் சேதுபதி எதனால் இந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்டிருக்கிறார் என்பது நமக்குப் புரிந்துவிடுகிறது. அது புரிந்த பிறகும், இதனால் தான் விஜய் சேதுபதி இடதுசாரி இயக்கத்தால் ஈர்க்கப்படுகிறார் என்பதை விவரிக்கும் வகையிலான காட்சிகள் படத்தில் மேலும் தொடர்கிறது. அது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.
படத்தின் கிளைமாக்ஸிலும் இந்தச் சிக்கல் உள்ளது. அவர் சரணடையப்போகிறார் என்பது நமக்குத் தெரிந்துவிடுகிறது, அதற்கான காரணமும் புரிந்துவிடுகிறது. இருந்தாலும், அதைச் சுற்றி நீண்ட நேரம் வசனம் பேசுகிறார்கள்.
படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து மீண்டும் சூரி கதைக்குள் வருகிறார். சேத்தன் கதாபாத்திரமும் வருகிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை நகர்கிறது. முதல் பகுதியை ஒப்பிடுகையில், இரண்டாம் பகுதியில் நிறைய முரண்கள் இருப்பதால், அது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. துப்பாக்கிகளை ஏந்தி நிற்கும் காவலர்களுக்கு, அரசியலை மிக எளிமையாகப் புரிய வைத்த விதம் நன்றாக இருந்தது.
மேலும், இரண்டாம் பகுதியில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளே வருகின்றன. அவர்களால் ஏற்படும் நகர்வுகள், குழப்பங்கள், அதைச் சமாளிப்பதற்கான சூழ்ச்சி என கடைசி அரை மணி நேரம் விறுவிறுப்பு எடுத்து வெற்றி காண்கிறது விடுதலை 2. குறிப்பாக, விடுதலை 1-ல் சேத்தன் கதாபாத்திரம் ஏற்படுத்திய வெறுப்பு, விடுதலை 2-லும் தொடர்கிறது. இதிலும் அந்தக் கதாபாத்திரம் அப்படியே வெறுப்பைக் கடத்தி வெற்றி கண்டிருக்கிறது. சேத்தன் அதைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
நடிப்பில் விஜய் சேதுபதிக்கு நிறைய பரிணாமங்கள் உள்ளன. வசனங்கள் சற்று குறைவாக இருந்திருக்கலாம் என்பதைத் தாண்டி, அவர் வழக்கம்போல் அவர் பணியை நன்றாகச் செய்துகொடுத்துள்ளார். விடுதலை 1-ஐ போல விடுதலை 2-விலும் சூரி எந்தவொரு இடத்திலும் சூரியாகத் தெரியாமல், குமரேசனாக மட்டும் தெரிந்து மிரட்டியிருக்கிறார். கிளைமாக்ஸில் சூரி கைத்தட்டல்களை அள்ளுகிறார்.
மஞ்சு வாரியருக்கு முதல் பாதியில் கிடைத்த வரவேற்பு, இரண்டாம் பாதியில் இல்லை. ஒரு கட்டத்தில் அவர் காணாமல் போய்விட்டார். மேலே சொன்னபடி, தலைமைச் செயலாளர் கதாபாத்திரத்துக்கு மிகச் சரியானத் தேர்வாக ராஜீவ் மேனன் உள்ளார். இந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்து அசத்தியிருக்கிறார்.
படத்தில் வசனங்கள் நிறைய இருப்பது குறை தான் என்றாலும், வசனங்கள் அனைத்தும் மிக முக்கியமானவை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை விமர்சிக்கும் வகையில் வசனம் இடம்பெற்றுள்ளது.
பின்னணி இசையைச் சொல்ல வேண்டுமானால், இரு இசை மட்டுமே தொடர்ச்சியாகப் படத்தில் வருகிறது. இளையராஜாவைப் போற்றி பேசும்போது, எந்த இடத்தில் இசை வரக்கூடாது என்பது ராஜாவுக்குத் தெரியும் என்பார்கள். இதிலும் அதேதான். விடுதலை 2 இறுதிக் காட்சிகள் பரபரப்பாக நகர்கிறது. மிகுந்த அழுத்தத்துடன் நிறைவு பெறுகிறது. ஆனால், நிறைய இடங்களில் மௌனத்தைக் கடைபிடித்து வென்றிருக்கிறார் இளையராஜா.
ஒட்டுமொத்தமாக படம் நன்றாக உள்ளதா? என்றால், அரசியல் வீச்சில் விடுதலை 2 வெற்றி கண்டிருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள கம்யூனிஸ இயக்கச் செயற்பாட்டாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்களுடைய முக்கியத்துவம் தான் என்ன? என்பதை அறிய விரும்பினால், அதற்கானச் சரியான படமாக விடுதலை 2 இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு கம்யூனிஸ சித்தாந்தத்தைக் கடத்தியதில் வெற்றி கண்டிருக்கிறது. படமாகப் பார்க்கும்போது, ஊசியில் நூல் கோர்ப்பதைப்போல் இல்லாமல் கதையம்சத்தைத் தாண்டி அரசியல் சற்று தலைதூக்கி இருப்பதால் (பேசியதில் விமர்சனமில்லை, பேசிய விதத்தில்தான் விமர்சனம்), திரை அனுபவமாக விடுதலை 2 சற்று ஏமாற்றமளிக்கலாம்.