ஏஸ் படம் வந்ததே பலருக்குத் தெரியாது: விஜய் சேதுபதி

"படத்துக்கு மக்கள் இவ்வளவு பெரிய வரவேற்பைக் கொடுத்ததற்கு நன்றி."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
2 min read

ஏஸ் திரைப்படம் வெளியானதே பலருக்குத் தெரியவில்லை என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ருக்மினி வசந்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ஏஸ். திரையரங்குகளில் படம் வெளியானாலும், தக் லைஃப் படம் விளம்பரங்களுக்கு மத்தியில் ஏஸ் படத்தின் விளம்பரப் பணிகள் எடுபடவில்லை. இந்நிலையில் திரையரங்குகளுக்குச் சென்று படத்தைப் பார்வையிட்டு வரும் விஜய் சேதுபதி இன்று வடபழனியில் உள்ள கமலா திரையரங்குக்குச் சென்றார். இங்கு செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, ஏஸ் படம் வந்தது பலருக்குத் தெரியவில்லை என்றார்.

"மக்களுக்கு மிக்க நன்றி. ஏஸ் படம் வெளியானது பலருக்குத் தெரியவில்லை. அது எங்களுடைய தவறு தான். சில நெருக்கடிகளால் படத்தை திடீரென வெளியிட வேண்டியதாகிவிட்டது. அவையனைத்தையும் சொல்ல முடியாது.

மக்களுடைய முடிவு நேர்மறையானதாக இருக்கும்போது, அவர்களை வந்து பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த ஊடகங்கள் அனைத்துக்கும் நன்றி. மக்களுக்கும் மிக்க நன்றி.

தியேட்டர் கிடைக்காமல் என்னுடைய படங்களும் தள்ளிப்போயுள்ளன. ஒரு படத்தை எடுத்து முடித்த பிறகு, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஒரு நேரம் தேவை. ஜூன் 5-ல் தக் லைஃப் வெளியாகிறது. பெரிய நட்சத்திரப் பட்டாளம், பெரிய படமான அதற்கே, மக்களிடம் கொண்டு சேர்க்க 20, 25 நாள்கள் தேவைப்படுகிறது. எனவே, படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க குறைந்தபட்சம் ஒரு நேரம் தேவைப்படுகிறது.

எல்லோருக்கும் அவரவருக்கென்று வேலை இருக்கிறது. இதற்கு மத்தியில் ஒரு படம் வெளியாவதும் அது எந்தத் தேதியில் வெளியாக வேண்டும் என்பதையும் பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. நாங்கள் ஒரு வாரத்துக்கு முன்பு தான் விளம்பரப் பணிகளை ஆரம்பித்தோம்.

இருந்தாலும், நாங்கள் எதிர்பார்க்கவில்லை. படத்துக்கு மக்கள் இவ்வளவு பெரிய வரவேற்பைக் கொடுத்ததற்கு நன்றி.

முன்பு சினிமா மட்டும்தான் இருந்தது. இம்முறை, நிறைய கன்டென்ட் கிடைக்கிறது. கவனச் சிதறல்கள் நிறைய உள்ளன. சந்தையில் புதிதாக ஒரு பொருள் வரும்போது, அதை அந்நிறுவனம் மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பரம் செய்யவதில்லையா, அதுபோல மக்களிடம் படம் வருவதாகக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இப்படியொரு படம் இந்த நாளில் வருகிறது, படம் இப்படி இருக்கிறது என மக்களிடம் சொல்ல வேண்டும். அந்த வேலையைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. வியாபாரம் தானே இது. வியாபாரத்துக்கு விளம்பரம் முக்கியம்.

விளம்பரப் பணிகளைத் தாமதமாக மேற்கொண்டதற்காக வருத்தப்படவில்லை. படத்தின் முடிவு தான் எப்போதும் மகிழ்ச்சி. படம் நன்றாக இருக்கிறது. மக்களுக்குப் படம் பிடித்திருக்கும்போது, நமக்குப் பெரிய நம்பிக்கை வருகிறது. அது ரொம்ப சந்தோஷம். அதை மேலும் பலருக்குக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

படத்தை விளம்பரப்படுத்த வேண்டும். மக்களிடம் போய் சேர்வதற்கு ஒரு நேரம் உள்ளது. விளம்பரப்படுத்தி இப்படியொன்று இருக்கிறது என்று சொல்ல வேண்டுமல்லவா. அது எல்லோருக்கும் தேவைப்படுகிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை நன்றாக விளம்பரப்படுத்தினார்கள். மக்களிடம் நன்றாக வந்து சேர்ந்தது. அப்படத்தின் தயாரிப்பாளர் யுவராஜ் பற்றி எனக்குத் தெரியும். யுவராஜ் சிறப்பாகவே சந்தைப்படுத்துவார். இதற்கு முன்பு வெளியான லவ்வர் படமாக இருக்கட்டும், யுவராஜுக்கு அது நன்றாக வரும். இதை யுவராஜைப் பார்த்தே பாராட்டியிருக்கிறேன்.

எனவே, டூரிஸ்ட் ஃபேமிலி விளம்பரம் இல்லாமல் வரவில்லை. படத்தை விளம்பரப்படுத்த ஒரு நேரம் இருக்கிறது என்பதை தான் நான் சொல்ல வந்தேன். மேலும், டூரிஸ்ட் ஃபேமிலி படமும் மிக நன்றாக உள்ளது. மக்கள் வழியாகச் சென்றடைந்ததும் அது தான். வெறும் விளம்பரப்படுத்துவதால் மட்டுமே ஒரு படம் மக்களிடம் போய் சேராது. இரண்டு சேர்ந்து தான் உள்ளது" என்றார் விஜய் சேதுபதி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in