மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது: புஸ்ஸி ஆனந்த்

“எங்களுடைய இலக்கு 2026 தேர்தல் தான்”.
புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான மாநாடு நடைபெறும் இடத்தை தேர்வு செய்து வருவதாக புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் விஜய் அறிவித்தார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி வாரியான நிர்வாகிகளின் கூட்டம் வரும் ஜூன் 18 அன்று சென்னையில் உள்ள பனையூரில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் தெரிகிறது.

இக்கூட்டத்தில் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஈரோட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற புஸ்ஸி ஆனந்த், “மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது” என்றார்.

புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது: “எங்களுடைய இலக்கு 2026 தேர்தல் தான். கட்சிகளுடன் கூட்டணி, கட்சியின் முக்கியமான முடிவுகள் என எதுவாக இருந்தாலும் எங்களது தலைவர் அறிவிப்பார். இதுவரை பல லட்ச கணக்கான உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது, விஜய்யிடம் அனுமதி பெற்றப்பின் அறிவிக்கப்படும். கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் செய்துக் கொண்டிருக்கும் மக்கள் பணியைத் தொடர கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதற்கான பலன் 2026-ல் எங்களுக்கு கிடைக்கும். நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in