கடந்த ஒரு வருடத்தில் இரு விஜய் படங்கள் வெளியான நிலையில் விடாமுயற்சி படத்தின் வெளியீட்டு தேதி கூட இன்னமும் வெளியிடாமல் இருப்பது குறித்த அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியானலும் படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னமும் வெளியாகவில்லை.
இன்று, விஜயின் கோட் படம் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் லியோ படம் வெளியானது. 2023 ஜனவரியில் விஜயின் வாரிசும் அஜித்தின் துணிவும் வெளியாகின. 2023 முதல் விஜயின் 3 படங்கள் வெளியாகிவிட்டன. ஆனால் அஜித்துக்கோ ஒரு படம் மட்டுமே வெளியாகியுள்ளது. மேலும் அஜித் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் வெளியீட்டுத் தேதி கூட இன்னமும் அறிவிக்காமல் இருப்பதால் லைகா நிறுவனத்திடம் தங்கள் ஆதங்கத்தையும் கோபத்தையும் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்த மீம்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
முன்னதாக அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் ரசிகர்கள் பல இடங்களில் அப்டேட் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
இதனிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படம் 2025 பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.