ரஜினியின் வேட்டையன் படம் அக்டோபர் 10-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேலின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’.
இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற பலரும் நடிக்கின்றனர். இசை - அனிருத்.
இப்படம் அக்டோபர் 10-ல் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை உறுதிபடுத்தியது லைகா நிறுவனம்.
வேட்டையன் படம் அக்டோபர் 10-ல் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சூர்யாவின் கங்குவா படமும் அக்டோபர் 10-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, கங்குவா படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா "ரஜினியுடன் போட்டி போடவேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை" என்று பேட்டியளித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “வேட்டையன் படத்தை தீபாவளி அன்று வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது. அதனால் தான் கங்குவா படத்தை அக்டோபர் 10 அன்று ரிலீஸ் செய்கிறோம். மற்றபடி ரஜினியுடன் போட்டி போடவேண்டும் என்ற எண்ணம் இல்லை. நானே மிகப்பெரிய ரஜினி ரசிகன். என்னுடைய பிறந்தநாளுக்கு கூட கோயிலுக்கு செல்லமாட்டேன். ஆனால், ரஜினியின் பிறந்தநாள் என்றால் தவறாமல் கோயிலுக்கு சென்று 108 முறை கோயிலைச் சுற்றி வருவேன்” என்று ஞானவேல் ராஜா பேசியிருந்தார்.
இந்நிலையில் வேட்டையன் படம் அக்டோபர் 10-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சொன்ன வார்த்தையை ஞானவேல் ராஜா காப்பாற்றுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரு பெரியப் படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் ஞானவேல் ராஜா இவ்வாறு பேசியதால் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.