சிம்பு படத்தால் தனுஷுடன் பிரச்னையா?: வெற்றி மாறன் விளக்கம்

"சிம்புவை வைத்து இயக்கும் படம் வடசென்னை 2 கிடையாது. வடசென்னை 2 என்பது அன்புவின் எழுச்சி தான். தனுஷ் நடிப்பது தான்..."
சிம்பு படத்தால் தனுஷுடன் பிரச்னையா?: வெற்றி மாறன் விளக்கம்
https://www.youtube.com/@GrassRootFilmCompany
2 min read

சிம்புவை வைத்து இயக்கும் படம் வடசென்னை உலகில் நடக்கக் கூடியது, இதற்கு காப்புரிமை வைத்துள்ள தனுஷ் பணம் வேண்டாம் எனக் கூறிவிட்டார் என இயக்குநர் வெற்றி மாறன் விளக்கமளித்துள்ளார்.

விடுதலை இரு பாகங்களைத் தொடர்ந்து, கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் சிம்புவை வைத்து படம் இயக்கி வருகிறார் இயக்குநர் வெற்றி மாறன். இந்தப் படம் பற்றிய அறிவிப்புக்கான முன்னோட்டக் காட்சிகளின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இப்படம் வெற்றி மாறன் ஏற்கெனவே இயக்கிய வடசென்னை படத்தில் இடம்பெற்ற ராஜன் கதாபாத்திரத்தின் முன்கதை என்று தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, வடசென்னை படத்தின் காப்புரிமை தயாரிப்பாளர் என்ற அடிப்படையில் தனுஷ் வசம் இருப்பதால், இப்படத்தை எடுக்க தனுஷ் தரப்பில் ரூ. 20 கோடி கேட்கப்பட்டதாகவும் இணையத்தில் சில தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த வதந்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெற்றி மாறன் காணொளி வாயிலாக விளக்கம் கொடுத்துள்ளார்.

"என் அடுத்த படம் தாணு தயாரிப்பில் சிம்பு நடிக்கிறார். வாடிவாசல் படம் எழுத்துப் பணி மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் தாமதமாகும் என்பதால், முதலில் இப்படம்.

சிம்புவை வைத்து இயக்கும் படம் வடசென்னை 2 கிடையாது. வடசென்னை 2 என்பது அன்புவின் எழுச்சி தான். தனுஷ் நடிப்பது தான் வடசென்னை 2 ஆக இருக்க முடியும். ஆனால், சிம்புவின் படமும் வடசென்னை உலகில் நடக்கக்கூடியது. அதாவது, வடசென்னையில் உள்ள அம்சங்கள், கதாபாத்திரங்கள் இந்தக் கதையிலும் இருக்கும். இதுவும் அதே காலகட்டத்தில் நடக்கக் கூடிய கதையாக இருக்கும்.

தனுஷ் தான் வடசென்னை தயாரிப்பாளர். வடசென்னை சார்ந்த அனைத்துக்கும் அவர் தான் காப்புரிமை வைத்துள்ளார். வடசென்னை அல்லது அதிலுள்ள கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு எதைச் செய்தாலும், அவர் தான் காப்புரிமை உரிமையாளர். எனவே, காப்புரிமை பெற்றுள்ளதை மற்றவர் பயன்படுத்துவதற்கு பணம் கேட்பது சட்டரீதியாகவும் சரி, தார்மீக ரீதியாகவும் சரி. முதலில் அதை எதிர்மறையாக, கொச்சையாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் நான், தாணு, சிம்பு சந்தித்த அடுத்த நாள் தனுஷை அழைத்துப் பேசினேன். இப்படத்தை வடசென்னை உலகில் வைத்தும் உருவாக்க முடியும், அது இல்லாமல் முற்றிலுமாக தனிப் படமாகவும் உருவாக்க முடியும். இரண்டில் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். வடசென்னை உலகம், கதாபாத்திரங்களின் காப்புரிமை உங்களிடம் இருப்பதால், உங்களைச் சார்ந்து தான் அந்த முடிவு இருக்கிறது என்றேன்.

அப்படியெல்லாம் எதுவும் நினைக்க வேண்டாம். உங்களுக்கு படைப்பை உருவாக்க எது சௌகரியமாக இருக்குமோ அதைச் செய்யுங்கள். வடசென்னை உலகில் படத்தை எடுப்பது சரியாக இருக்கும் என்று தோன்றினால், அப்படியே படம் எடுங்கள். எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நான் என் தயாரிப்புக் குழுவிடம் பேசிவிடுகிறேன். உடனடியாக எங்கள் தரப்பிலிருந்து தடையில்லாச் சான்றிதழைக் கொடுத்துவிடுகிறேன். பணம் எல்லாம் எதுவும் வேண்டாம் என அப்போதே அவர் கூறிவிட்டார்.

தனுஷைப் பற்றியும் என்னைப் பற்றியும் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. தனுஷுக்கும் எனக்கும் இடையிலான உறவு என்பது இதுபோல ஒரு சம்பவத்தில் அல்லது ஒரு படத்தில் மாறக்கூடிய பாதிப்படையக்கூடிய ஒன்று கிடையாது.

சிம்புவுடன் படம் செய்வதாகச் சொன்னபோது, உங்களுக்கு இது கண்டிப்பாக வேறு மாதிரியாக இருக்கும். சிம்புவுக்கும் உங்களுடன் பணிபுரிவது புது அனுபவமாக இருக்கும் என்றார் தனுஷ்.

சிம்புவும் நான்கு நாள்களுக்கு முன் என்னை வந்து சந்தித்தார். உங்களுக்கு எது சௌகரியமாக இருக்குமோ அதைச் செய்யுங்கள். இந்தப் படத்தை வடசென்னை உலகில் எடுத்தாலும் சரி, தனிப்படமாக உருவாக்கினாலும் சரி. உங்களுக்கும் தனுஷுக்கும் இடையிலான உடன்படிக்கை பாதிப்படையாதவாறு எதைச் செய்தாலும் எனக்கு சரி என்றார் சிம்பு. எனவே, இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் மரியாதை வைத்துள்ளார்கள்.

இதுதொடர்பாக வெளிவரும் ஊகங்கள் அனைத்தும் வெறும் ஊகங்கள் தான் வேறு எதுவும் கிடையாது" என்றார் வெற்றி மாறன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in