வாழை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா. இரஞ்சித் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாக உள்ளது.
இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. முன்னதாக டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பா.இரஞ்சித், மிஷ்கின், வெற்றிமாறன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய இரஞ்சித், “மாரி செல்வராஜ் அனைத்து இயக்குநர்களுக்கும் படத்தைக் காட்டி அது குறித்து பேச வைக்கிறார். என்னுடைய படத்தைப் பாருங்கள் என்று சொல்லவே எனக்கு கூச்சமாக இருக்கும். ஒரு சில இயக்குநர்கள் என் படத்தைப் பார்த்துவிட்டு தங்களின் கருத்தை சொல்லமாட்டார்களா? என்று எதிர்பார்த்திருக்கிறேன்.
ஒரு பிரபல இயக்குநர், எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் என் படத்தைப் பார்த்தும், அதை என்னிடம் சொல்லவில்லை. அவர் என் படத்தைப் பார்த்ததாக அவருடன் சேர்ந்து பார்த்த ஒரு சிலர் என்னிடம் சொன்னார்கள். ஆனால், அந்த இயக்குநரே தற்போது மாரி செல்வராஜ் படம் குறித்து பேசுகிறார். இதை நான் கேலி கிண்டலுக்காக சொல்லவில்லை” என்றார்.
இதைத் தொடர்ந்து இரஞ்சித் எந்த இயக்குநரை குறிப்பிட்டு இவ்வாறு பேசினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே வாழை டிரைலர் வெளியீட்டு விழாவில் காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்த மணிரத்னம், “மாரி செல்வராஜ் தமிழ் திரையுலகின் வலிமையான குரலாக இருக்கிறார். அவரை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. இப்படத்தில் எப்படி இவ்வளவு நடிகர்களைச் சிறப்பாக நடிக்க வைத்தார் என்பது தெரியவில்லை. எனக்கு பொறாமையாக இருக்கிறது. அவரிடம் தனித் திறமை உள்ளது” என்றார்.
இந்நிலையில், பா. இரஞ்சித் மணிரத்னத்தை குறிப்பிட்டு தான் அந்த கருத்தை தெரிவித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.