

சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தின் தணிக்கை செய்யப்படாத பதிப்பு ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பராசக்தி. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் 25-வது படமான இது, ஜனவரி 10 அன்று வெளியானது.
படத்தின் தணிக்கை பிரச்னை
ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும், தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது படத்தைத் தணிக்கைக் குழு பலமுறை ஆய்வுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் படத்தில் தணிக்கைத் துறையினர் மாற்றி அமைக்கப் பரிந்துரைத்த 25-க்கும் மேற்பட்ட காட்சிகளின் பட்டியலும் வெளியானது.
படத்தில் மாற்றம் செய்யப்பட்ட இடங்கள்
பராசக்தி படத்தில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை கதாபாத்திரம் பேசும் இடத்தில் அண்ணாதுரையின் புகழ்பெற்ற ”இங்கு யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் நாட்டை ஆள்கிறான் என்று பொருள்” என்ற உரையின் பகுதி நீக்கப்பட்டது. அவரது புத்தகத்தின் தலைப்பான தீ பரவட்டும் என்பது நீதி பரவட்டும் என்று மாற்றப்பட்டது. அஞ்சல் நிலையத்தின் பலகையின் மீது மாட்டு சாணத்தைப் பூசுவதுபோல் அமைந்த காட்சி நீக்கப்பட்டது. பல வசனங்கள் மாற்றப்பட்டன. படத்தில் மொத்தம் 52 இடங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வசனங்கள் மௌனமாக்கப்பட்டன.
ரூ. 100 கோடி வசூல் சாதனை
படம் வெளியாகி திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலக அளவில் படம் ரூ. 100 கோடி வசூலைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து ஜீ5 ஓடிடி தளத்தில் பிப்ரவரி 7 அன்று வெளியானது. வெளியான இரண்டே நாள்களில் ஒரு கோடிக்கும் அதிகமான நிமிடங்கள் பார்க்கப்பட்டு, படம் சாதனை படைத்தது. இதையடுத்து படத்தின் தணிக்கை செய்யப்படாத பதிப்பு வெளியாகுமா என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
படத்தின் தணிக்கை செய்யப்படாத பதிப்பு
இந்நிலையில், படத்தின் தணிக்கை செய்யப்படாத பதிப்பை வெளியிட்டுள்ளதாக ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது. “தமிழ் தீ பரவட்டும். நாங்கள் உங்கள் கோரிக்கைகளைக் கேட்டுக் கொண்டோம். தணிக்கைச் செய்யப்படாத பதிப்பு வெளியாகிவிட்டது” என்ற அறிவிப்புடன் ஜீ5 இது குறித்த சமூக ஊடகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
The uncensored version of Sivakarthikeyan's film Parasakthi has been released on the OTT platform.