
தொழிலதிபருடன் த்ரிஷாவுக்குத் திருமணம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாகக் கோலோச்சி வருகிறார் த்ரிஷா. 1999-ல் ஜோடி படத்தின் மூலம் அறிமுகம் ஆன த்ரிஷா, சமீபத்தில் வெளியான தக் லைஃப் வரை முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போதும் அடுத்தடுத்த படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
இதற்கிடையில், இன்னும் திருமணம் ஆகாத அவருக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் பரவி வருகின்றன. முன்னதாக ஏற்கெனவே அவர் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டு, பிறகு ரத்தானது. இதையடுத்து தொழிலதிபர் ஒருவரைத் த்ரிஷா கரம்பிடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தனது திருமணம் குறித்த செய்திகளுக்குக் கருத்து தெரிவித்து த்ரிஷா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “என் வாழ்க்கையை எனக்காகப் பிறர் திட்டமிடுவது எனக்குப் பிடிக்கும். என்னுடைய தேனிலவு குறித்தும் அவர்கள் திட்டமிடுவதற்காகக் காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.