இயக்குநர் மோகன் ஜியைப் பிணையில் விடுவித்தது திருச்சி நீதிமன்றம்

இன்று காலை சென்னையில் வைத்து மோகன் ஜி கைது செய்யப்பட்டார்.
இயக்குநர் மோகன் ஜியைப் பிணையில் விடுவித்தது திருச்சி நீதிமன்றம்
படம்: https://x.com/mohandreamer
1 min read

இயக்குநர் மோகன் ஜியைப் பிணையில் விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் மோகன் ஜி இன்று காலை சென்னையில் கைது செய்யப்பட்டார். பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக ஊடகத்துக்கு அளித்த பேட்டியொன்றில் மோகன் ஜி விமர்சனம் செய்து பேசியதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மோகன் ஜியின் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மோகன் ஜி கைது செய்யப்பட்டது ஏன் என திருச்சி மாவட்ட காவல் துறை விளக்கமளித்ததாவது.

"திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள இந்து அறநிலையத் துறையில் மேலாளராகப் பணிபுரிந்து வரும் கவியரசு கொடுத்த புகாரில் கடந்த 21 அன்று மதியம் 1 மணியளவில் தான் பணியில் இருந்தபோது, பக்தர்கள் சிலர் இந்து மதத்தையும் இந்துக் கோவில்களைப் பற்றியும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி பேசியதாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, எனது செல்போனில் பார்த்தபோது, ஐபிசி யூடியூப் சேனலுக்கு, "உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா என்ற தலைப்பில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளைப் பயன்படுத்துவதாக, உண்மைக்குப் புறம்பான விமர்சனம் செய்து, கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளதாகவும், தற்சமயம் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் அசைவப் பொருள்களான மீன் எண்ணெய்யும், மாட்டுக் கொழுப்பும் கலந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரம் அடங்குவதற்குள், தமிழக மக்களிடையே மதநல்லிணத்தைக் கெடுக்கும் வகையிலும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பொய்யான செய்தியைப் பரப்பியதாக, தமிழ்த் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மீது நடவடிக்கை எடுக்கும்படி கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மேற்படி நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படவுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, திருச்சி நீதிமன்றத்தில் மோகன் ஜி ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவரை சொந்தப் பிணையில் விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் மோகன் ஜி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in