
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வரும் செப்டெம்பர் 13 அன்று அரசு தரப்பில் பாராட்டு விழா நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டனில் கடந்த மார்ச் 9 அன்று இசையமைப்பாளர் இளையராஜா சிம்பெனி இசைத் தொகுப்பை வெளியிட்டார். ஒன்றரை மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் அவரது ’ராஜா ராஜாதி’, ‘பூவே செம்பூவே’, ‘கண்ணே கலைமானே’ ஆகிய பாடல்கள், பிரம்மாண்ட இசைத் தொகுப்பாக இசைக்கப்பட்டது தமிழ் ரசிகர்களை திளைப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து இளையராஜா லண்டனில் சிம்பெனி இசைத்து சாதனை புரிந்ததற்காகவும் திரைத்துறையில் 50 ஆண்டுகளாக இசையமைத்து வருவதற்காகவும் அவருக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். முன்னதாக லண்டன் செல்வதற்கு முன் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்தும், சென்றுவந்த பின் பாராட்டையும் இளையராஜா நேரில் சந்தித்து பெற்றிருந்த நிலையில், ஜூன் 2-ல் அவருக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளும் இளையராஜாவின் பிறந்தநாளும் ஒரே ஜூன் 3 என்பதால் நீண்ட காலமாக இளையராஜா முந்தைய நாளான ஜூன் 2-ல் பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு அன்றைய தினமே அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. முதல்வரின் பணிச்சுமை காரணமாக நிகழ்ச்சி, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வரும் செப்டம்பர் 13 அன்று இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இவ்விழா நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இளையராஜாவைப் பாராட்டிப் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த விழாவில் இளையராஜா தன் குழுவினருடன் சிம்பெனி இசைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு திரையுலகம் முழுவதையும் இளையராஜா சார்பில் அழைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Ilaiyaraja | M.K. Stalin | TN CM | Symphony | Maestro Ilaiyaraja | Rajinikanth | Kamal Hassan |