முட்டாள்கள் தான் சாதி குறித்து பேசுவார்கள் என்று திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் வாழை. தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கொண்டு புனைவுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக மாரி செல்வராஜ் படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.
கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “தற்போது வரக்கூடிய ஒரு சில படங்கள் முதல் பாதி வரை நல்ல படமாக இருக்கிறது. 2-வது பாதியில் சாதி குறித்து பேசுகிறார்கள். நாம் அனைவரும் படித்தவர்கள். இன்றைய காலக்கட்டத்தில் யாராவது சாதி கேட்பார்களா? முட்டாள்கள் தான் சாதி குறித்து கேட்பார்கள். ஆனால், மேடையில் ஏறிவிட்டு நாங்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று பேசுகிறார்கள். இவ்வாறு பேசுபவர்கள் பென்ஸ் காரில் வந்து இறங்கிவிட்டு தங்களைப் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிறார்கள். விளிம்பு நிலையில் வாழும் மக்கள் குறித்து படங்கள் எடுக்கிறார்கள், ஆனால் அப்படி ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்களா? பணம் உள்ளவர் முற்படுத்தப்பட்டவர். பணம் இல்லாதவர் பிற்படுத்தப்பட்டவர்” என்று திருப்பூர் சுப்ரமணியம் பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து திருப்பூர் சுப்ரமணியம் மாரி செல்வராஜை குறிப்பிட்டு இவ்வாறு பேசினாரா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக, மாரி செல்வராஜ் ஒரு பேட்டியில், “கார் வைத்திருக்கும் உனக்கு என்ன ஆதங்கம் என்று என்னிடம் கேட்கிறார்கள். இவ்வாறு கேட்பவர்கள் என்னுடைய ஒரு வகையான வாழ்கையை மட்டுமே பார்க்கிறார்கள். அவர்களுக்கு என்னை அதிகபட்சமாக 5 வருடங்களாக தெரியும். எனவே, இந்த 5 வருடத்தில் என்னுடைய வாழ்கையைப் பார்த்துவிட்டு இதுபோன்று பேசுகிறார்கள். ஆனால் 35 வருடங்களாக நான் எதிர்கொண்டதைச் சொல்லும் ஒரு ஆண்மா தான் நீங்கள் பார்க்கும் மாரி செல்வராஜ். நான் தற்போது வாழும் வாழ்க்கையை வைத்து என்னை தீர்மானிக்கக் கூடாது” என்று பேசியிருந்தார்.