தக் லைஃப் படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும் என்பதை கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார்.
ஓடிடியின் வருகை திரையரங்குகளுக்குப் பிரச்னையாக மாறியது. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஓடிடியின் வளர்ச்சி திரையரங்கு உரிமையாளர்களை சற்று அச்சத்தில் ஆழ்த்தியது. இருந்தபோதிலும், ஒரு கட்டத்துக்குப் பிறகு திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் கூடிக்கொண்டுதான் இருந்தது. திரையரங்குகள் வசம் இருந்த பெரிய சவாலே குடும்பங்களை உள்ளே அழைத்து வருவதுதான். காரணம், திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் வெறும் 4 வார இடைவெளியில் ஓடிடியில் வெளியாகின்றன. இதனால், சிலர் படங்களை ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துவிடுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் கூறப்பட்டு வந்தது.
திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திரைப்படங்களை 8 வார இடைவெளியில் ஓடிடியில் வெளியிட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மணி ரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படம் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகவுள்ளது.
மும்பையில் நடைபெற்ற தக் லைஃப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், தக் லைஃப் படத்தை 8 வார இடைவெளியில் ஓடிடியில் வெளியிடுவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. கமல்ஹாசன் இதற்குப் பதிலளித்தார்.
"தக் லைஃப் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும் எனத் திட்டமிட்டுள்ளது பரிசோதனை முயற்சி அல்ல, நடைமுறை சார்ந்தது. ஓடிடி நிறுவனம் இதற்கு ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி. இரு தரப்பும் அமர்ந்து பேச்சுவார்த்தைகூட நடத்தவில்லை. இதுதான் திட்டமாகவே இருந்தது. மற்றவர்களும் இதைப் பின்பற்றலாம். இது திரைத் துறையை ஆரோக்கியமானதாக மாற்றும்" என்றார் கமல்ஹாசன்.
தக் லைஃப் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நாயகன் படத்துக்குப் பிறகு மணி ரத்னம் - கமல்ஹாசன் மீண்டும் இணைந்துள்ள படம் தக் லைஃப். இப்படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளன. சிம்பு, அஷோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, நாசர் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே உள்ளார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.