
ரூ. 7 கோடியில் உருவான டூரிஸ்ட் ஃபேமிலி படம், உலகளவில் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூலித்து நடப்பாண்டில் இதுவரை அதிகமாக லாபமீட்டிய இந்தியப் படமாக சாதனை படைத்துள்ளது.
நடப்பாண்டின் முதல் பாதியில் வெளியிடப்பட்ட இந்தியப் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சாவா மற்றும் எல்2: எம்புரான் ஆகிய பெரிய பட்ஜெட் படங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து, பாக்ஸ் ஆபிஸிலும் சிறப்பாக செயல்பட்டன.
ஆனால் வெறும் ரூ. 7 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ் படமான டூரிஸ்ட் ஃபேமிலி உலகளவில் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதன் மூலம், நடப்பாண்டில் இதுவரை அதிகமாக லாபம் ஈட்டிய இந்தியப் படமாக டூரிஸ்ட் ஃபேமிலி சாதனை படைத்துள்ளதாக ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ் ஜெகன் ஆகியோர் நடிப்பில் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இந்த படம் கடந்த ஏப்ரல் 29 அன்று வெளியானது. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் உலகளவில் ரூ. 90 கோடிக்கு மேல் வசூலித்தன் மூலம், பட்ஜெட் மதிப்பில் தோராயமாக 1300% வருவாயாக ஈட்டியுள்ளது.
பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டை பெற்ற இந்த படம் வெளியான முதல் வாரத்தில் ரூ. 23 கோடியும், 2-வது வாரத்தில் ரூ. 29 கோடியும் வசூலித்தது. ஐந்து வாரங்கள் திரையரங்குகளில் ஓடிய இந்த படம், ஒட்டுமொத்தமாக உள்நாட்டில் ரூ. 62 கோடியும், சர்வதேச அளவில் ரூ. 28 கோடியும் வசூலித்ததாக கூறப்படுகிறது.
உலகளவில் ரூ. 808 கோடி வசூலித்து நடப்பாண்டில் இதுவரை அதிகமாக வசூல் செய்த இந்தியப் படம் `சாவா’ உள்ளது. ரூ. 90 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 800% லாபம் ஈட்டியுள்ளது.