பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தைப் பாராட்டிய திருமாவளவன்!| Thirumavalavan | Dude |

"இறுதிக் காட்சி, சாதிய சமூகத்துக்கு சவுக்கால் அடிக்கிற வசனங்களாக உள்ளன."
VCK President Thol. Thirumavalavan MP has praised Pradeep Ranganathan’s film Dude.
படக் குழுவினருடன் செய்தியாளரைச் சந்தித்த திருமாவளவன்
2 min read

பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தைப் பார்த்து விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. அதைப் பாராட்டியுள்ளார்.

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் டியூட். ஆணவக் கொலையைக் கண்டிக்கும் வகையிலான கதைக் களத்தில் இப்படம் உருவாகியிருக்கிறது. அழுத்தமான கருத்தாக இருந்தாலும் இதைச் சொன்ன விதம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. ரூ. 100 கோடி வசூலைத் தாண்டி திரையரங்குகளில் படம் வெற்றிநடைபோட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் இப்படத்தை நேற்று பார்த்தார்கள்.

திருமாவளவன் எம்.பி. படம் பற்றி கூறியதாவது:

"திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் டியூட் திரைப்படத்தை இன்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், ஆணவக் கொலைக்கு எதிராகவும் பேசுகிறது. காதலுக்கு சாதி, மதம், பொருளாதாரம் போன்ற எந்த வரையறையும் தேவையில்லை. இரு மனங்கள் போதும் என்கிற வரையறையை முன்னிறுத்தி இத்திரைப்படத்தை இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கியிருக்கிறார்.

நகைச்சுவை ததும்ப அதே வேளையில் சமூகத்தின் மிக முக்கியமான, நாள்தோறும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிற மிகப் பெரிய ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படத்தை பிரமாண்டமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் கீர்த்திஸ்வரன்.

இந்தத் தலைமுறைக்குப் பொருந்தும் வகையில் இந்தத் திரைப்படத்தை அவர் படைத்திருப்பது அவருடைய படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறது. இந்தத் தலைமுறையின் உளவியலையும் அவர் நல்ல முறையில் உள்வாங்கியிருக்கிறார், வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதற்கு இப்படம் சான்றாக இருக்கிறது.

ஜென்ஸி கிட்ஸ் எனச் சொல்லப்படுகிற 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் தலைமுறையினர் கையாளும், நாள்தோறும் புழக்கத்தில் பேசக்கூடிய மொழியையும் நட்பு, காதல் இரண்டுக்கும் இடையிலான புரிதலையும் மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். நட்பு வேறு, காதல் வேறு என்றாலும் காதலுக்கு நட்பு தான் அடிப்படையானது, நட்பு தான் காதல் என்று கதாநாயகனின் நண்பன் பேசும் வசனம் இருக்கிறது. நட்புக்கு மிக உயர்ந்த மரியாதையைத் தருகிறார். அந்த நட்பு தான் காதலுக்கு அடிப்படையாக இருக்கிறது என்பதை அடுத்தடுத்த காட்சிகளில் பதிவு செய்கிறார்.

மானம் பெரியதா, உயிர் பெரியதா என்கிற உரையாடலும் படத்தில் நிகழ்கிறது. அவள் விரும்புகிறவனுடன் அவள் வாழட்டும் என்று அவளுக்காகப் படத்தின் இறுதிக் காட்சி வரை போராடும் புதிய அணுகுமுறை. இது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வியை எழுப்பலாம். ஆனால், இதை ஒரு விவாதமாக்கியிருக்கிறார் அல்லது வெளிச்சப்படுத்தியிருக்கிறார் கீர்த்திஸ்வரன் என்பது கவனிக்கத்தக்கது.

அவள் இரண்டாவதாகக் காதலிக்கும் கதாபாத்திரம், நீ எனக்காகத் திருமணம் செய்து பிறகு அப்பெண்ணை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்கிற இடம் மிகவும் உணர்வுபூர்மாக இருக்கிறது. அதை ஏற்க முடியாது என்பது நம் உளவியல். ஆனால், அதை ஏற்க வேண்டும் என்பது இந்தத் தலைமுறையின் பரிணாம வளர்ச்சி.

இறுதிக் காட்சி, சாதிய சமூகத்துக்கு சவுக்கால் அடிக்கிற வசனங்களாக உள்ளன. ஆணவக் கொலைகளை நியாயப்படுத்துகிற சாதியவாதக் கும்பல்களுக்குப் புத்தி புரட்டுவதாக இருக்கிறது.

ஒரு செய்தியை எப்படி திரைமொழி மூலம் சொல்ல முடியும், அழுத்தமாகச் சொல்ல முடியும். இன்றைய தலைமுறை புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சொல்ல முடியும் என்பதை இத்திரைப்படம் மூலம் கீர்த்திஸ்வரன் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப பிரதீப் ரங்கநாதனின் நடிப்பும் அவருக்குத் துணை நின்ற அத்தனை பேருடைய நடிப்பும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. இவர்களுடைய கையில் தான் திரை உலகம் தற்போது இருக்கிறது என்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். இருவருக்கும் எனது வாழ்த்துகள்" என்றார் திருமாவளவன்.

Summary

VCK President Thol. Thirumavalavan MP has praised Pradeep Ranganathan’s film Dude.

Thirumavalavan | Dude | Keerthiswaran | Mutharasan | Pradeep Ranganathan | Mamitha Baiju | Sarathkumar | Honour Killing |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in