அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான டிராகன், முதல் நாளிலேயே படம் கொலை மாஸ், தெறி ஹிட், பிளாக்பஸ்டர் என்றெல்லாம் பெயர் வாங்கியுள்ளது. விமர்சனங்களில் ஒருவர் விடாமல், அனைவரும் படத்தைப் பாராட்டுகிறார்கள்.
படம் வெளியாவதற்கு முன்பு டிரெய்லரை பார்த்து இது என்ன டான் 2 படம் மாதிரி இருக்கிறதே என்று பல விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல், கல்லூரியில் படிக்கும்போது பொறுப்பில்லாமல் சுற்றுவது, பிறகு வாழ்க்கையில் ஜெயிப்பதைப்போல படத்தை முடிப்பது, இதெல்லாம் ஏமாற்று வேலை என்றுகூட விமர்சனங்கள் வந்தன.
இந்த விமர்சனங்கள் எல்லாத்துக்கும் தாங்கள் ஒரு முழு பூசணிக்காயை படத்தில் ஒழித்து வைத்திருக்கிறோம் என்று எல்லா நேர்காணல்களிலும் அஷ்வத் பதில் கூறி வந்தார். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் டிரெய்லரில் பார்த்தது மட்டும் படம் கிடையாது என்பதை வலியுறுத்தி வந்தார். உண்மையில், டிரைலரில் பார்த்தது மட்டும் படம் இல்லை என்பதை நிரூபித்ததால் தான், முதல் நாளில் எல்லோரும் பாராட்டும், திரையரங்குகளில் ரசித்து கை தட்டிய படமாக டிராகன் அமைந்துள்ளது.
அஷ்வத்துக்கு இது இண்டாவது படம். இதற்கு முன்பு ஓ மை கடவுளே எடுத்து பாராட்டுகளை வாங்கினார். பிரதீப் ரங்கநாதனுக்கு நடிப்பில் இது இரண்டாவது படமாக இருந்தாலும், சினிமாவில் அவருக்கு இது மூன்றாவது படம். மூன்றிலும் வெற்றி பெற்று ஹாட் டிரிக் அடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
சரி, என்ன பிரதீப் ரங்கநாதன் இந்தப் போடு போடகிறாரோ... அவரைப் பார்த்தாலே ரசிகர்கள் காட்டுக் கத்து கத்துகிறார்களே... அவர் அடிக்கும் கவுன்டர்களுக்கு திரையரங்குகள் அல்லோலகல்லோலப்படுகிறது என்று தோன்றலாம்.
அதெப்படி பிரதீப் ரங்கதான் தொட்டதெல்லாம் பொன்னாகிறது? என்ன மாயம் செய்கிறார்? ரசிகர்களோட நாடித் துடிப்பை அவரால் மட்டும் எப்படிச் சரியாக கணிக்க முடிகிறது? இத்தனைக்கும் அவர் வாரிசு நடிகர் கிடையாது. அஜித், விஜய் சேதுபதியைப்போல எந்தப் பின்புலமும் இல்லாமல் கோலிவுட்டுக்கு வந்தவர். அஜித், விஜய் சேதுபதிக்குக் கூட ஆரம்பத்தில் இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இவர் மட்டும் எப்படி?
கிரிக்கெட்டில் ஒரு பேட்டர் பந்துவீச்சாளரா இருந்தா, அவர்களுக்குச் சில சூட்சமங்கள் தெரியும். சச்சின், காலிஸ் எல்லாம் அப்படித்தான் பேட்டிங், பந்துவீச்சுனு இரண்டிலும் அசத்துவார்கள். அப்படித்தான் பிரதீப் ரங்கநாதனும். அவர் இயக்குநராக உள்ளே நுழைந்து வெற்றி பெற்ற பிறகு கதாநாயகன் ஆனவர். எங்க அடித்தால் ஒரு ரசிகன் சீட்டை விட்டு எழுந்து கரகோஷம் எழுப்புவான் என்பது அவருக்குத் தெரியும்.
பிரதீப் ரங்கநாதன் பொறியியல் படித்தவர். இவர் சினிமாவைப் படித்தது யூடியூப் மற்றும் இணையதளத்தில்தான். யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்த்தது கிடையாது. எதுவுமே இல்லாதபோதுதான் எல்லாத்தையும் கற்றுக்கொள்ள முடியும் என்பது பிரதீபின் ஃபார்முலா.
ஐடியில் வேலை பார்த்தவர் பிரதீப். சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் ஏற்கெனவே எடுத்த ஷார்ட் ஃபிலிம்களோட, உதவி இயக்குநர் வேலையைத் தேடி அலைந்துள்ளார். ஓரிரு பேர் கூப்பிட்டாலும் அதுவும் பெரிய இடத்தின் பரிந்துரைகள் காரணமாக, கடைசி நேரத்தில் பிரதீபின் இடம் பறிபோயுள்ளது. பிறகு, குறும் படங்கள் எடுத்த அனுபவத்தில் கோமாளி மூலமாக நேரடியாக சினிமாவுக்குள் வந்துவிட்டார்.
கோமாளியில் நாம் சமூக ஊடகங்கள், செல்ஃபோனால் தினமும் அனுபவிக்கும் பிரச்னைகளைக் கதையாக மேற்கொண்டார். இதனால் ரசிகர்களால், கதையுடன் மிகவும் சுலபமாக தொடர்புப்படுத்திக்கொள்ள முடிந்தது. ஒரு படத்தில், அதன் காட்சிகளோடு தொடர்புப்படுத்திக்கொள்ள முடியாதது தான் ரசிகர்களின் பெரிய பிரச்னையாக இருந்துள்ளது.
கோமாளி டிரெய்லர் அல்லது டீசரில், பழைய நினைவுகளை இழந்த நிலைக்குச் சென்றவனுக்குப் பல வருடங்களுக்குப் பிறகு நினைவு திரும்பினால் எப்படி இருக்கும் என்கிற ஒரு வரியை, மிகவும் அழகாக ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவாக வெளியிட்டு காண்பித்திருப்பார். அதில் அந்த நேரத்தில் டிரெண்டில் இருந்த விஷயங்களை, பழைய விஷயங்களுடன் ஒப்பிட்டு காண்பித்த விதம் சிறப்பாக இருந்தது. உதாரணம், ரவி மோகன் நினைவு இழந்த நேரத்தில் அரசியலுக்கு வருவதாகச் சொல்லிக்கொண்டிருந்த ரஜினி, நினைவு திரும்பிய காலத்திலும் அதே பல்லவியைப் பாடிக்கொண்டிருப்பதைக் கதையோடு கோர்த்து கேலி செய்திருப்பார். பிறகு, ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பு காரணமாக அதை மாற்றியது வேறு.
அடுத்ததாக, இதைப்போலவே மற்றொரு அட்டகாசமான படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்தபோதுதான் இயக்குநர் அவதாரத்துடன் கதாநாயகனாகவும் வந்து நின்றார். அதுதான் லவ் டுடே.
லவ் டுடேவில் முதல் போஸ்டரை வெளியிட்டு, என்னைவிட்டுப் பிரிந்து சென்ற பழையக் காதலிக்குச் சமர்ப்பிப்பதாகச் சொல்லியிருப்பார். இது படத்துக்கு ஒரு பெரிய கவனத்தைப் பெற்றுக் கொடுத்தது. ஏற்கெனவே, அவர் எடுத்த குறும்படமாக இருந்தாலும், காதலர்கள் இருவர் செல்ஃபோனை மாற்றிக்கொள்வதால் ஏற்படும் குழப்பம் என்ன என்பதன் ஒன் லைனை, திரும்பவும் சுவாரஸ்யமாகக் கோர்த்து படம் எடுத்திருந்தார். அதிலும் இளைஞர்களுக்குப் பிடித்த மாதிரியான காட்சிகள், வசனங்கள் என்று படம் ரகளையாக இருந்தது. மாமாக்குட்டி மாதிரியான சின்னஞ்சிறு விஷயங்களில் கவனம் செலுத்தியிருந்தார். மிகமிக சிறிய செலவில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், வசூலில் அள்ளிக் குவித்தது லவ் டுடே. படம் வெற்றியென்றால், திரையுலகமே பிரதீப் ரங்கநாதனைத் திரும்பிப் பார்க்கும் வகையில் வெற்றி. திரையரங்குகள் அனைத்து திருவிழாக்கோலம். அதேசமயம், படத்தில் பெண்களைக் காண்பித்த விதம், சில வசனங்கள், சில காட்சிகள் விமர்சனத்துக்குள்ளாகின.
மேலும், நடிப்புக்கான இலக்கணத்தை உடைத்து இதற்கு நிறைய நடிகர்கள் எப்படி வந்தார்களோ, அந்த வரிசையில்தான் பிரதீப் ரங்கநாதனும் மிக இயல்பாக இருக்கிறார், எல்லோருக்கும் பிடிப்பதைப்போல நடிக்கிறார், வசனம் பேசுகிறார். இவரால் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்கிற பிரச்னைகளைப் படமாகச் செய்ய முடிகிறது. இதனால் தான் 2கே கிட்ஸ்களுக்கு இவரை மிகவும் பிடிக்கிறது.
2கே கிட்ஸ் என்றால்தான் யார்? 1997 - 2010 காலகட்டத்தில் பிறந்தவர்கள்தான் 2கே கிட்ஸ் என்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்களில் படித்துக்கொண்டிருப்பார்கள், கல்லூரிகளில் இருப்பார்கள், வேலையில் புதிதாகச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவருடன் தோற்றத்தில் மட்டுமாக அல்லாமல், அவர்கள் செய்யும் விஷயங்களையும் கவனித்து, அதைக் காட்சிகளாகவும் வசனங்களாகவும் மாற்றுகிறார். லவ் டுடே படத்தைவிட இன்று டிரென்டில் வந்த படம் வேறு ஏதாவது உண்டா? பிறகு ஏன் படம் வெற்றியடையாது?
பிரதீப் ரங்கநாதன் படங்களை 2கே கிட்ஸ் மட்டும்தான் ரசிக்கிறார்களா என்ன? அதுதான் கிடையாது. அவர் படங்களில் ஒரு வித்தியாசமான கலவை உள்ளது. இந்தக் கோணத்தில் யாரும் யோசிக்கவில்லை என்றுகூட சொல்லலாம். புதிய தொழில்நுட்பங்கள் வரவால் உறவுகளை இழக்கிறோம் என்று கோமாளியில் பேசியதாகட்டும், ஓர் உறவில் நம்பிக்கைதான் அடிப்படை என்று லவ் டுடேவில் பேசியதாக இருக்கட்டும். படம் முழுக்க 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தொடர்பற்ற விஷயங்களைக் காண்பித்தாலும், இறுதியில் அரைமணி நேரத்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் பேசக்கூடிய கருத்துகளைக் கொண்ட கதையைப் படமாக எடுக்கிறார். இதனால், 2கே கிட்ஸ், 90ஸ் கிட்ஸ், 80ஸ் 70ஸ் கிட்ஸ்னு எல்லோரும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். இதை எப்படி பிரதீப் சாத்தியமாக்கினார் என்பது உண்மையில் ஆச்சர்யமாகவே உள்ளது.
டிராகன் டிரைய்லரைப் பார்த்தோம் என்றால், பிரதீப்பின் முதலிரு படங்களுக்கும் நேர் மாறானது. படத்தில் மறுவாய்ப்பு என்று ஓர் அட்டகாசமான ஒன்லைன் உள்ளது. அதை டிரைலரில் இயக்குநர் அஷ்வத் காண்பிக்கவில்லை. என் படம் இதற்கு முன்பு வெளியான படத்தின் நகல் என்று சொல்லி கேலி செய்தாலும் பரவாயில்லை என்று முக்கியமான விஷயத்தை இயக்குநர் ஒளித்துவைத்துவிட்டார். இருந்தபோதிலும் பொறியியல் கல்லூரி, சிகரெட், காதல், முத்தம், அரியர் என இந்த முறையும் இளைஞர்களையும் 2கே கிட்ஸையும் படம் உள்ளே கொண்டு வந்துவிட்டது. இதுபோதாதா? இதுவரை தனியாக சிக்ஸர் அடித்துக்கொண்டிருந்த பிரதீப் இந்தமுறை அஷ்வத்துடன் இணைந்து கலக்கியிருக்கிறார்.
டிரெய்லரில் பார்த்ததைப்போல, கல்லூரியில் படிக்காமல் பொறுப்பில்லாமல் சுற்றிக்கொண்டிருந்த ஓர் இளைஞனாகவே பிரதீப் இருக்கிறார். இடைவேளையில் ஒரு விஷயத்தை வெளிக்கொண்டு வருகிறார்கள். இந்த ஆச்சர்யத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. படத்தின் வெடிகுண்டே இதுதான். இதிலும் இன்ஸ்டா ரீல்ஸ் செய்வது, இன்ஸ்டா டிரென்டிங் என இளைஞர்களுடன் சுலபமாகப் பொருந்திப் போகிறார். கோமாளி, லவ் டுடே போல டிராகன்லயும் கருத்து உள்ளது.
நான் செய்தது எல்லாம் தவறுதான் என்று பிரதீப் மூலமாகவே தான் சொல்ல வந்த கதையை மிக அழகாக ரசிகர்கள் மனதில் பதிய வைத்துள்ளார் அஷ்வத். இந்த இடத்தில்தான் இது எல்லோருக்குமான படமாக மாறுகிறது. இந்தக் கதையை அஷ்வத் மிகச் சரியாக பிரதீப்பிடம் கொண்டு சென்றதும், அதை பிரதீப் மிகச் சரியாக ஏற்றுக்கொண்டதும் மற்றொரு முக்கியமான விஷயம். டிராகனில் மற்றொரு கதாநாயகன் நடித்திருந்தால் இப்படி வந்திருக்குமா என்று தெரியவில்லை.
பெரிய பெரிய ஜாம்பவான்களும் தோல்வியடைவதைப் பார்க்கிறோம். ஆனால், பிரதீப் ரங்கநாதன் எளிதாக வெற்றி பெறுகிறார். படம் பார்த்தவர்களுக்கும் மகிழ்ச்சி. திரையுலகுக்கும் மகிழ்ச்சி. திரையுலகை இப்படிப்பட்ட படங்கள்தான் வாழவைக்கும். பிரதீப் ரங்கநாதன் வானத்தில் இருந்து குதித்து வந்ததைப்போல வெற்றி பெறுகிறார். இது தொடர வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். இளைஞர்களின் பிரச்னைகளை அவர் தன் படங்களில் தொடர்ந்து காண்பிக்க வேண்டும். இதைப்போல எல்லோருக்கும் பிடித்த படங்களாகத் தொடர்ந்து இயக்க வேண்டும். எல்லோரையும் திரையரங்குகளில் மகிழ்ச்சியடையச் செய்ய முடியாமல் திணறுகிறார்கள். பிரதீப் ரங்கநாதனால் தான் இது முடிகிறது.
தொடர்ந்து வெற்றி பெறுங்கள் சகோ!