
திரையரங்கு கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் இன்று காலை மத்திய சிறையிலிருந்து வெளியே வந்தார்.
புஷ்பா 2 வெளியீட்டின்போது சிறப்புக் காட்சியைப் பார்க்க ஹைதராபாதில் உள்ள சந்தியா திரையரங்குக்கு அல்லு அர்ஜுன் சென்றார். அப்போது ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தார்கள். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இவருடைய மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் சந்தியா திரையரங்கு நிர்வாகம், அல்லு அர்ஜுன் மற்றும் அவருடையப் பாதுகாப்புக் குழுவினர் மீது சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் காவல் துறையினர் அல்லு அர்ஜுனை நேற்று கைது செய்தார்கள். இவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, தெலங்கானா உயர் நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு இடைக்காலப் பிணை வழங்கியது. இருந்தபோதிலும், நேற்றிரவு சஞ்சல்குடா மத்திய சிறையில் இருக்க வேண்டி இருந்தது. தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் முறைப்படி கிடைக்கப்பெறுவதில் சிக்கல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சஞ்சல்குடா மத்திய சிறையிலிருந்து அல்லு அர்ஜுன் இன்று காலை வெளியே வந்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"அனைவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வருத்தம் வேண்டாம். நான் நலமுடன் உள்ளேன்.
நான் சட்டத்தை மதித்து முழு ஒத்துழைப்பைக் கொடுப்பவன். மிக முக்கியமாக, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு மீண்டும் ஒரு முறை மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு சம்பவம். படம் பார்க்கச் சென்றோம். அது ஒரு விபத்து. எதிர்பாராமல் நடந்து விபத்து. துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் ஒருவரை இழந்துள்ளோம். இது என் தனிப்பட்ட கட்டுப்பாட்டை மீறி நடந்த ஒன்று.
கடந்த 20 வருடங்களாக நான்திரையரங்குக்குச் சென்று வருகிறேன். 30-க்கும் மேற்பட்ட முறை இந்தத் திரையரங்குக்குச் சென்று வருகிறேன். இது மாதிரியான ஒரு விபத்து இதற்கு முன்பு நடந்ததே இல்லை.
தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த வழிகளில் அவருடையக் குடும்பத்துக்கு நான் உதவுவேன். இழப்பை சரிகட்ட முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால், என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன்.
மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். அனைவருடைய ஆதரவுக்கும் நன்றிகள்" என்றார் அல்லு அர்ஜுன்.