.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
என்னுடைய ரசிகர் பட்டாளம் பற்றி உங்களுக்குத் தெரியாது என்று நடிகர் விக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - ஜி.வி. பிரகாஷ். தயாரிப்பு - ஞானவேல் ராஜா. இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விக்ரமிடம் அஜித், சூர்யா அளவிற்கு உங்களுக்கு ரசிகர்கள் இல்லையே? என்ற கேள்வியை எழுப்ப அதற்கு சரியான பதிலடியை கொடுத்தார் விக்ரம்.
விக்ரம் பேசியதாவது: “என்னுடைய ரசிகர் பட்டாளம் பற்றி உங்களுக்குத் தெரியாது. திரையரங்குகளில் வந்து பாருங்கள். இங்கு சிறந்த மூன்று, நான்கு (Top 3, Top 4) என்று எதுவும் இல்லை. ரசிகர்களில் பொதுவான ரசிகர்களும் இருக்கிறார்கள். அனைத்து நடிகர்களின் ரசிகர்களும், எனக்கு ரசிகர்களாக இருப்பார்கள்.
படம் வெளியான பிறகு இதே கேள்வியை நீங்கள் கேழுங்கள், அதற்கான பதில் அப்போது உங்களுக்கு தெரியும். நான் ஏற்கெனவே சினிமாவில் உச்சத்துக்கு சென்றவன், எனக்கு தெரியாது என்று எதுவும் இல்லை. எப்போதும் சினிமாவில் புது முயற்சிகளை செய்து கொண்டே இருப்பேன்” என்றார்.
மேலும் கேள்வி கேட்ட செய்தியாளரிடம், “நீங்கள் யார் ரசிகர்? உங்களை யாரோ அனுப்பி வைத்தது போல் இருக்கிறதே?” என்று கேலி செய்தார் விக்ரம்.