
தங்கலான் படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - ஜி.வி. பிரகாஷ். தயாரிப்பு - ஞானவேல் ராஜா. இப்படம் நாளை (ஆகஸ்ட் 15) வெளியாக உள்ளது.
முன்னதாக, அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை திவாலானவராக அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தங்கலான் படத்தை வெளியிடும் முன்பு ரூ. 1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அப்பணத்தை செலுத்திய நிலையில் தங்கலான் படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், சூர்யா நடிக்கும் கங்குவா படத்தை வெளியிடும் முன்பும் ரூ. 1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.