தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான படம் தங்கலான்.
ஒரு பக்கம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் நடிப்பும், ஜி.வி. பிரகாஷின் இசையும் படத்துக்கு பலமாக அமைந்துள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 26 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக அதிகாராபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று ஹைதராபாதில் நடைபெற்றது.
இதில் பேசிய விக்ரம், “உங்கள் அனைவருக்கும் தங்கலான் படம் மிகவும் பிடித்த காரணத்தால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் எடுக்க திட்டமிட்டுள்ளோம். நீங்கள் இப்படத்திற்கு கொடுக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எடுக்கலாம். ரஞ்சித்துக்கு நேரம் கிடைக்கும்போது படத்தைத் தொடங்குவோம். நான் எப்போதும் ரஞ்சித்துக்காக நேரத்தை ஒதுக்குவேன்” என்றார்.