இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த அனுமதி வாங்குவது எப்படி?: தெலுங்கு இயக்குநர் விளக்கம் | Anil Ravipudi |

அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த படத்தில் இளையராஜா பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது...
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த அனுமதி வாங்குவது எப்படி?: தெலுங்கு இயக்குநர் விளக்கம்
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த அனுமதி வாங்குவது எப்படி?: தெலுங்கு இயக்குநர் விளக்கம்
1 min read

சிரஞ்சீவின் புதிய படத்தில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்பட்டது சர்ச்சைக்குள்ளான நிலையில், பாடலைத் தான் எப்படிப் பெற்றேன் என்பதற்கான விளக்கத்தை படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் மெகா ஸ்டார் என்று புகழப்படும் சிரஞ்சீவின் 175-வது படம் மன ஷங்கர வரபிரசாத் காரு. இதனை பகவந்த் கேசரி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை எடுத்த அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். நயன்தாரா, கேத்ரின் தெர்சா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் பொங்கல் வெளியீடாகக் கடந்த ஜனவரி 12 அன்று வெளியானது. படம் வெளியாகி இரண்டு நாள்களிலேயே ரூ. 120 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. சிரஞ்சீவிக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு கிடைத்த வெற்றிப் படம் என்று இப்படம் கொண்டாடப்படுகிறது.

தெலுங்கு படத்தில் இளையராஜா பாடல்

இதற்கிடையில் இப்படத்தில் தளபதி படத்தின் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது சர்ச்சைக்குள்ளானது. தமிழ்ப் படங்களில் தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டால் உடனே வழக்கு தொடரும் இளையராஜா, ஏன் இப்படத்திற்கு மட்டும் காப்புரிமை கேட்கவில்லை என்று கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் இளையராஜா காப்புரிமை கேட்காதது ஏன் என்பது குறித்து படத்தின் இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

இயக்குநர் அனில் ரவிபுடி விளக்கம்

இது தொடர்பாக விழா ஒன்றில் பேசிய இயக்குநர் அனில் ரவிபுடி கூறியதாவது: “இளையராஜாவின் அருமையான பாடல் ஒன்று இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது தளபதி படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்ற பாடல். இதை சிரஞ்சீவி, நயன் தாராவும் நடித்த காதல் காட்சி ஒன்றின் பின்னணியில் பயன்படுத்தியிருக்கிறோம். என்னைப் பொறுத்தளவில் இது படத்திலேயே சிறந்த பகுதியாக வந்திருக்கிறது. அது மிகவும் அழகாக வந்திருக்கிறது. இளையராஜாவைப் பற்றி வெளியில் எல்லாரும் அவர் எல்லாவற்றுக்கும் வழக்கு தொடுப்பார் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு வழிமுறை உண்டு.

இளையராஜா பாடல்களைப் பெறும் வழிமுறை

இந்தப் படத்தில், வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகு இசையமைப்பாளரையும் தயாரிப்பாளையும் இளையராஜாவிடம் அழைத்துக் கொண்டு போய், உங்கள் பாடலை என் படத்தில் பயன்படுத்த அனுமதி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். தொழில்முறையாக பாடல்களைப் பெறுவதற்கான ஆவண வழிமுறைகளையும் செய்து கொடுத்தார். என்னைப் பொறுத்தவரை அவரிடம் ஒழுங்காக சென்று அனுமதி கேட்டால் அவர் ஒப்புக்கொள்வார் என்பதுதான் உண்மை. அவர் வழக்கு தொடரும் மற்ற படங்களில், அவரிடம் எப்படிச் என்று அனுமதி கேட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. வழிமுறை ஒழுங்காக இருந்தால் அவர் நிச்சயம் ஒப்புக்கொள்வார்” என்றார்.

Summary

Telugu director Anil Ravipudi explained how he obtained permission to use Ilaiyaraaja’s song in his recent film, amid the growing controversies surrounding Ilaiyaraaja’s lawsuits

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in