அனுமதி மறுத்தும் திரையரங்குக்குச் சென்ற அல்லு அர்ஜுன்: தெலங்கானா முதல்வர்

"கூட்டநெரிசல் ஏற்பட்டு பெண் உயிரிழந்துள்ளார் என்பதை அறிந்தும் படம் பார்க்கவே அல்லு அர்ஜுன் விரும்பினார்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
2 min read

ஹைதராபாத் திரையரங்கில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல் துறையினர் அனுமதி மறுத்தும் அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு வந்ததாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார்.

மேலும் கூட்டநெரிசல் ஏற்பட்டுவிட்டது, பெண் உயிரிழந்துவிட்டார் என்பதை அறிந்தும் அல்லு அர்ஜுன் படம் பார்க்கவே முனைப்பு காட்டியதாகவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

புஷ்பா 2 வெளியீட்டின்போது படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விவரிக்குமாறு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அக்பருதின் ஒவைஸி எழுப்பியக் கேள்விக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பதிலளித்துப் பேசினார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் பேசியதாவது:

"தெலுங்கு திரைத் துறையின் மனோபாவம் மனிதாபமற்ற முறையில் உள்ளது. ரேவதியின் மரணத்துக்கு யாரும் எதிர்வினையாற்றவில்லை.

ஆனால், திரைத் துறையைச் சேர்ந்த அதே மக்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவராக சிறையில் ஓர் இரவை மட்டுமே கழித்து வெளியான அல்லு அர்ஜுனை நேரில் சென்று பார்வையிடுகிறார்கள். அவருக்குத் தீவிரமான காயங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதா எனப் பார்க்கிறார்கள்.

திரைத் துறையில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், இந்தச் சமுதாயத்துக்கு நாம் என்ன செய்தியைக் கடத்துகிறோம் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். திரைத் துறையில் மூத்தவர்களாக இருப்பவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது இதை தானா?" என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார்.

திரையரங்கில் அல்லு அர்ஜுனைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள், அவர்களைக் கட்டுப்படுத்துவது சவாலானது என்று கூறி காவல் துறையினர், அவர் திரையரங்குக்கு வர அனுமதி மறுத்ததாக ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார். விதிகளை மீறியே அல்லு அர்ஜுன் சம்பந்தப்பட்ட திரையரங்குக்குச் சென்றதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது, ஏற்கெனவே ஒரு பெண் உயிரிழந்துள்ளார் என்பதை அறிந்த பிறகும் அல்லு அர்ஜுன் திரையரங்கில் படம் பார்க்க முடிவு செய்துள்ளார் என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

இதன்பிறகு, சம்பவம் குறித்து அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மேற்கொண்டு கூட்டநெரிசல் மற்றும் பரபரப்பைத் தவிர்ப்பதற்காக அமைதியாக புறப்பட்டுச் செல்லுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியதாகக் கூறினார். இருந்தபோதிலும், அல்லு அர்ஜுன் அங்கிருந்து புறப்பட்ட மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படுவீர்கள் என காவல் துறை துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்த பிறகே, அல்லு அர்ஜுன் திரையரங்கிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

மேலும், புறப்பட்டுச் செல்லும்போது சிறு வருத்தம் கூட வெளிப்படுத்தாமல், திரும்பிச் செல்வதையும் கார் ரூஃபிலிருந்தபடி சாலைப் பேரணியாக மாற்றி, ரசிகர்களுக்குக் கையசைத்தபடி சென்றுள்ளார்.

திரைத் துறையினருக்கு தனிச் சட்டம் கிடையாது, அவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை ரேவந்த் ரெட்டி தெளிவுபடுத்தியுள்ளார். கைது குறித்து தெரிவிக்க, காவல் துறையினர் வீட்டுக்குச் சென்றபோதும் அல்லு அர்ஜுன் காட்டமாக நடந்துகொண்டதாக சட்டப்பேரவையில் அவர் கூறியுள்ளார்.

திரைத் துறையை ஊக்குவிப்பது குறித்து பேசிய அவர், "திரைத் துறையின் வளர்ச்சிக்கு அரசு துணை நிற்கிறது. வளர்ச்சிக்கான கொள்கையின் அடிப்படையில் சிறப்புக் காட்சிக்கு அரசாங்கத்தால் அனுமதி கொடுக்கப்படுகிறது. நீங்கள் தொழில் செய்து, எங்களிடமிருந்து அனுகூலத்தைப் பெற்றுக்கொண்டு திரைத் துறையை வலிமைப்படுத்திக் கொள்வீர்கள். ஆனால், மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள முடியாது" என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் விமர்சித்துள்ளார்.

புஷ்பா 2 வெளியீட்டின்போது, ஹைதராபாதிலுள்ள சந்தியா திரையரங்கில் சிறப்புக் காட்சியைப் பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் சென்றுள்ளார். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் கூடியதால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இவருடைய மகன் மருத்துவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். பிறகு, தெலங்கானா உயர் நீதிமன்றம் அளித்த இடைக்காலப் பிணை மூலம் வெளியே வந்தார் அல்லு அர்ஜுன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in