
மீ டூ (MeeToo) இயக்கத்தின்போது புகாரளித்த பிரபலங்களில் நடிகை தனுஸ்ரீ தத்தாவும் ஒருவர். 2018-ல் நடிகர் நானா படேகர் மீது இவர் மீ டூ குற்றச்சாட்டை எழுப்பினார். பாலிவுட்டில் பிரபலமானவராக அறியப்படும் தனுஸ்ரீ தத்தா, தமிழில் விஷாலுக்கு ஜோடியாக தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் நேற்று கண்ணீர் மல்க காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது சொந்த வீட்டிலேயே கடந்த 4-5 வருடங்களாகத் துன்புறுத்தப்படுவதாகவும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், யாராவது தனக்கு உதவுங்கள் என்றும் கண்ணீருடன் தனுஸ்ரீ தத்தா உதவி கோரியுள்ளார்.
மேலும், தான் எதிர்கொள்ளும் பிரச்னைக்கான ஆதாரமாகவும் மிகுந்த சப்தம் எழும் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார்.
இதுதொடர்பாக என்டிடிவி செய்தி நிறுவனத்திடம் பிரத்யேகமாகப் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே இடைவிடாத துன்புறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
"2018 மீ டூ இயக்கத்தின்போது மும்பை காவல் துறையுடனான எனது அனுபவம் கசப்பில் முடிந்தது. வழக்குப்பதிவு செய்வதற்கு என்னை அப்போது ஊக்கப்படுத்தினார்கள். காவல் நிலையத்தில் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை செலவிட்டேன். பிறகு, நீண்ட அறிக்கை ஒன்றைக் கொடுத்தார்கள். தொடர்ந்து பின்பற்றி வந்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. மஹாராஷ்டிரத்தில் பாலியல் சீண்டல், துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளுடன் இணக்கமாக இருப்பார்கள். அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். எனவே, இங்கு நீதிக்கான சாத்தியக்கூறுகளே இல்லை" என்றார் தனுஸ்ரீ தத்தா.
மேலும், தான் சந்தித்து வரும் பிரச்னைகள் இன்னும் நின்றபாடில்லை என்றும் தனுஸ்ரீ தெரிவித்துள்ளார். பயணம் செய்யும் நேரங்களில் விடுதி ஊழியர்கள் மீதும் இவர் சந்தேகத்தை எழுப்புகிறார்.
"நான் யாத்திரைகளின்போது வழிபட்டு, தியானம் செய்து, குணமடைய நினைத்தாலும் இந்தச் சம்பவங்கள் என்னைத் தொடர்கின்றன. வீட்டுக்கு டெலிவரி ஆகும் உணவுகள் பிரித்தவாறு வருகின்றன. மளிகைப் பொருள்கள் இப்படியாகவே வருகின்றன. என்னை நிலைகுலைய வைக்க வேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே செய்வது போல உள்ளது. இது உளவியல் ரீதியான பெரும் போராட்டம். என்னைப் பயப்படுத்த முயற்சிக்கிறார்கள். மீ
நான் ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் திரும்பி வந்ததிலிருந்து இது நடந்து வருகிறது. நீண்டகால இருந்துவரும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தால் நாள்பட்ட சோர்வுக்கான நோய் இருப்பதைக் கண்டறிந்துள்ளேன். விடுதிளில் மாற்றுச் சாவியைக் கொண்டு என் அறைக்குள் யாரோ வந்து செல்கிறார்கள். நான் அறையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி. என் அறைக்குள் வந்து நான் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே சிறிய விஷயங்களைச் செய்து முடித்து, பொருள்களைத் திருடிச் செல்கிறார்கள். தனிப்பட்ட, பாதுகாப்பான இடத்தில்கூட நான் பாதுகாப்பாக இல்லை என்பதை எனக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்கள்.
இரவு நேரங்களில் என் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். என் குடியிருக்கும் இடத்தில் பலமுறை தெரிவித்துவிட்டேன். நேற்றும் இது நடந்தது. யாரும் என் அழைப்பை ஏற்கவில்லை. நான் உடைந்துபோய்விட்டேன். காவல் துறையை அழைத்தேன். அவர்கள் வந்து காவலாளியிடம் பேசினார்கள். ஆனால், ஒரு தெளிவும் கிடைக்கவில்லை. மாறிமாறி பழி கூறுகிறார்கள். ஓஷிவாரா காவல் நிலையம் வந்து உயர் அதிகாரியிடம் பேசச் சொன்னார்கள். நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வார்கள் எனில் வருகிறேன் என்றேன். கிடைக்காத நீதிக்காக மீண்டும் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" என்று என்டிடிவியிடம் கூறினார் தனுஸ்ரீ தத்தா.
Tanushree Dutta | Me Too |