லட்டு பாவங்கள்: பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற தமிழக பாஜக!

ஹெச். ராஜாவிடம் கோபி, சுதாகர் இருவரும் மன்னிப்பு கேட்ட நிலையில்..
லட்டு பாவங்கள்: பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற தமிழக பாஜக!
1 min read

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீதான புகாரைத் திரும்பப் பெறுவதாக பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

லட்டு விவகாரம் தொடர்பாக பரிதாபங்கள் குழு தங்களின் வழக்கமான பாணியில் 'லட்டு பாவங்கள்' என்ற தலைப்பில் ஒரு காணொளியை வெளியிட்டனர். அந்த காணொளி வெளியான சில மணி நேரத்தில் அதிகமானப் பார்வைகளை பெற்றது. ஒரு சில கலவையான விமர்சனங்களையும் பெற்றது. இதைத் தொடர்ந்து பரிதாபங்கள் குழு அந்த காணொளியை நீக்கியது.

மேலும், இது குறித்து விளக்கம் அளித்த பரிதாபங்கள் குழு, “கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கி உள்ளோம். இதுபோல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஆந்திரப் பிரதேச காவல் துறை இயக்குநர் துவாரகா திருமலை ராவிடம் புகாரளித்தார்.

இந்நிலையில் பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜாவிடம் கோபி, சுதாகர் இருவரும் மன்னிப்பு கேட்ட நிலையில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீதான புகாரைத் திரும்பப் பெறுவதாக அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in