இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்த வருடம் லாபத்தா லேடீஸ் என்கிற ஹிந்திப் படம் தேர்வாகியுள்ளது.
1957 முதல் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருதுக்காக இந்தியப் படங்கள் அனுப்பப்படுகின்றன. இதுவரை ’மதர் இந்தியா’, ’சலாம் பாம்பே’, ’லகான்’ ஆகிய 3 இந்தியப் படங்கள் மட்டுமே ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு இறுதிக்கட்டம் வரை (டாப் 5) சென்றுள்ளன.
இதுதான் அனைவரும் அறிந்த புள்ளிவிவரம். ஆனால் 1957-ல் ஆரம்பித்து ஆஸ்கருக்காக அனுப்பப்பட்ட படங்களின் பட்டியலில் பல சுவாரசியப் புள்ளிவிவரங்கள் தென்படுகின்றன.
* 1957-ல் ஆரம்பித்து இதுவரை 55 இந்தியப் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 33 ஹிந்திப் படங்கள். (ஹேராம் உள்ளிட்ட 5 படங்கள் ஹிந்தியுடன் சேர்த்து இன்னொரு மொழிப் படமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.)
* ஹிந்திக்கு அடுத்து அதிகமாக ஹாலிவுட் விருதுக்கு அனுப்பப்பட்டதில் தமிழுக்கு இரண்டாமிடம். 10 தமிழ்ப் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. சிறந்த கலைப்படங்களை எடுக்கும் வங்காளம், மராத்தி, கன்னடம், மலையாளம் மொழிப் படங்களை விடவும் தமிழுக்குக் கூடுதல் வாய்ப்பு என்பது ஆச்சரியமாக இருக்கிறது. முதல்முதலில் தேர்வான தமிழ்ப் படம், தெய்வ மகன் (1969). கடைசியாக 2021-ல் கூழாங்கல். அதற்கு முன்பு 2016-ல் விசாரணை.
* 1987 முதல் 2000 வரை மட்டும் 7 தமிழ்ப் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த 14 வருட காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட சமஅளவில் தமிழும் (7) ஹிந்தியும்(6) தேர்வாகியுள்ளன. 1993, 1994 வருடங்களில் இரண்டு ஹிந்திப் படங்கள் தேர்வாயின. உடனே அடுத்த இரண்டு வருடங்கள் (1995, 1996) தமிழ்ப் படங்கள் தேர்வாகின. ஆஸ்கர் தேர்வு என்கிற வகையில் தமிழ் சினிமாவுக்குப் பொற்காலமான காலக்கட்டம் அது.
* 1985 முதல் 2000 வரை கமல் நடித்த சாகர், ஸ்வாதி முத்யம், நாயகன், தேவர் மகன், குருதிப்புனல், இந்தியன், ஹே ராம் ஆகிய 7 படங்கள் ஆஸ்கருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்தப் பெருமை வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லை. (அமீர் கான் படங்கள் - 4) கமலின் ஆஸ்கர் கனவு தீவிரமாக இருந்த சமயம் அது. இருந்தாலும் குணா, மகாநதி, அன்பே சிவம் போன்ற கமலின் முக்கியமான படங்களுக்கு இந்தப் பாக்கியம் கிட்டவில்லை.
* மணிரத்னத்தின் 2 படங்கள் (நாயகன், அஞ்சலி) ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் மிக ஜனரஞ்சகமாக படங்கள் எடுக்கும் ஷங்கரின் இரு படங்களுக்கும் (இந்தியன், ஜீன்ஸ்) இந்தப் பெருமை கிடைத்ததுதான் இன்னொரு ஆச்சர்யம்.
* ஜல்லிக்கட்டு, 2018 ஆகிய படங்களுடன் சேர்த்து இதுவரை 4 மலையாளப் படங்கள் மட்டுமே ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஒரு தெலுங்குப் படத்துக்காவது இந்த கௌரவம் கிடைத்தாலும் (ஸ்வாதி முத்யம்), தேசிய விருதுகளில் முன்னிலை வகிக்கும் கன்னடத் திரையுலகுக்கு ஒருமுறைகூட இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
* 2000-க்குப் பிறகுதான் தமிழில் வித்தியாசமான முயற்சிகள் அதிகம் நடக்கின்றன. 1987 - 2000 காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது கடந்த 24 வருடங்களில் விசாரணை, கூழாங்கல் என இரு தமிழ்ப் படங்களே ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.