நவம்பர் முதல் படப்பிடிப்புகள் நடைபெறாது: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு

"முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும்".
கோப்புப் படம்
கோப்புப் படம்
2 min read

நவம்பர் 1 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்தப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை

1. முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும்.

2. இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கெனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களில் பணிபுரியாமல், புதியதாக வரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள்.

இதனால், ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே, இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் பெற்றிருந்தால் அந்த படத்தினை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும்.

3. இன்றைய தேதியில் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி இருக்கிறது. அந்த நிலையை மாற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் (New Guidelines) உருவாக்கப்படவுள்ளது. அந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு படப்பிடிப்புகள் ஆரம்பிக்கலாம் என்பதால், வருகிற 16.08.2024 முதல் புதிய படங்கள் துவங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

4. தற்போது படப்பிடிப்பில் உள்ள படங்களின் விவரங்களை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு முறையாக கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று பேசி முடிவெடுக்கப்பட்டது. ஆகையால், தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புகளை வருகிற அக்டோபர் 30-ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.

5. நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம், மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால், அதை முறைப்படுத்த பல்வேறு முயற்சி செய்து, தமிழ் திரைத்துறையை மறு சீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. அதனால், வருகின்ற 01.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்துவிதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்தப்படும்.

6. இனிவரும் காலங்களில் திரைத்துறை சம்பந்தமாக வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளடக்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in