20 வருடத்துக்கு முன்பு ரஜினி சொன்ன அறிவுரை தன் மனதில் ஆழமாக பதிந்துவிட்டதாக சூர்யா தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்பட பலரும் நடித்துள்ளனர். இசை - தேவி ஸ்ரீ பிரசாத். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய சூர்யா, 20 வருடத்துக்கு முன்பு ரஜினி தனக்கு சொன்ன அறிவுரை குறித்து பகிர்ந்துள்ளார்.
சூர்யா பேசியதாவது:
“எப்படி சிங்கம் படத்தில் நடித்துவிட்டு ஜெய் பீம் போன்ற ஒரு படத்தில் உங்களால் நடிக்க முடிகிறது என்று என் மகள் என்னிடம் கேட்டார். 20 வருடத்துக்கு முன்பு ரஜினியுடன் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது, ‘நீங்கள் ஒரு கதாநாயகன் மட்டுமல்ல, ஒரு நடிகரும் கூட’ என்றும் இரண்டையும் சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் என்னிடம் சொன்னார். அது என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதனால் தான் சிங்கம், ஏழாம் அறிவு, ஜெய் பீம் போன்ற படங்களில் என்னால் நடிக்க முடிகிறது. அதிர்ஷ்டவசமாக இது போன்ற கதைகளுடன் இயக்குநர்கள் என்னை சந்தித்தனர்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.