
சூர்யாவின் ரெட்ரோ உலகளவில் ரூ. 235 கோடி வசூல் செய்துள்ளதாக 2டி தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் கடந்த மே 1 அன்று வெளியானது ரெட்ரோ. இதே நாளில் இளம் அறிமுக இயக்குநர் அபிஷன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலியும் வெளியானது. சூர்யாவின் ரெட்ரோவுக்கு சற்று எதிர்பார்ப்பு இருந்ததால், கலவையான விமர்சனங்கள் வந்தது. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இயல்பான உணர்வுகளைக் கொண்டு எடுத்ததால் டூரிஸ்ட் ஃபேமிலிக்கு நேர்மறையான விமர்சனங்கள் நிறைய வந்தன. சில திரையரங்குகளில், பெரிய திரை/அதிக இருக்கைகள் உடைய அரங்குகளுக்கு டூரிஸ்ட் ஃபேமிலி மாற்றப்பட்டது.
இதனால், ரெட்ரோவை விட டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றிப் படமாகப் பார்க்கப்பட்டது. டூரிஸ்ட் ஃபேமிலி படக் குழு வெற்றி விழாவையும் கொண்டாடியது.
இதனிடையே, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதர் பேசுகையில், "ரெட்ரோவின் ஒட்டுமொத்த வசூலை டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் முறியடித்துவிட்டது. இதை வெளிப்படையாக அறிவிக்கிறேன்" என்று கூறியிருந்தார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் 2டி தயாரிப்பு நிறுவனம் ரெட்ரோ திரைப்படத்தின் வசூல் விவரத்தை இன்று மீண்டும் வெளியிட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, உலகளவில் சூர்யாவின் ரெட்ரோ ரூ. 235 கோடியை வசூல் செய்துள்ளது.