3டி தொழில்நுட்பப் படத்துக்கு 3டி கண்ணாடி எப்படி அவசியமானதோ, கங்குவா படத்துக்கு காதுகளில் பஞ்சு என்பதும் அவசியமானதாக அமைந்துள்ளது.
சூர்யா நடிப்பில் சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ள ஒரு திரைப்படம் கங்குவா. மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரமாண்டப் படமாக வெளிவந்துள்ளது.
முன்பே தெரிந்ததுபோல படத்தில் இருவேறு உலகங்கள் உள்ளன. இந்த இரு வேறு உலகங்களை இணைக்கும் புள்ளி (உணர்வு) எது? இந்தப் புள்ளி சரியாக இணைக்கப்பட்டதா? இதன் உணர்வு சரியாகக் கடத்தப்பட்டதா? பெரிய பட்ஜெட் படம் என்ற விளம்பரத்துக்கு நியாயம் சேர்த்ததா? இந்தக் கேள்விகளுக்கானப் பதிலாக கங்குவா உள்ளது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதை உலகமே படத்தில் பெரும்பாலும் வருகிறது. இதன் காரணமாகவே 2024-ல் கோவாவில் நடக்கும் கதை நம் மனதில் பெரிதளவில் நிற்கவில்லை. இதற்கேற்ப இதில் வரும் கதாபாத்திரங்களும் வலுவாக எழுதப்படவில்லை. யோகி பாபு நகைச்சுவை சரியாக அமையவில்லை. திஷா படானி ஒரு விளம்பர மாடல் போலவே படத்தில் வருகிறார். இவருக்குப் பெரிய வசனங்கள், இந்தக் கதாபாத்திரத்துக்கான பின்கதை என எதுவும் சுவாரஸ்யமாக இல்லாமல் மிகவும் காட்சிப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
மற்றொரு கதையில் பார்த்துக்கொண்டால், ஒரு பெரிய விளக்கம் வருகிறது. அவை நமக்குப் புரிந்துவிடுகிறது என்றாலும், இன்னும் கொஞ்சம் நிறுத்தி நிதானமாகச் சொல்லியிருக்கலாமோ என்ற யோசனை வருகிறது. இந்தக் கதைக்குள் ஒரு பெரிய பகை, துரோகம் உள்ளது. துரோகத்தின் காரணம்கூட ஓரளவுக்கு நேரம் எடுத்து விளக்கியிருந்தாலும், பகையின் ஆழத்தை விவரிக்கத் தவறிவிட்டார்கள். இதன் காரணமாகவே, படத்தை உணர்வுரீதியாக அணுகுவதில் சிக்கல் இருந்தது.
வாக்குறுதியும் நம்பிக்கையும்.. இதுதான் கதையின் அடிநாதம். இது தான் இருவேறு உலகங்களை இணைக்கிற புள்ளி. அப்படியெனில், இந்த உணர்வு ரசிகர்களுக்கு எந்தளவுக்கு ஆழமாகக் கடத்தப்பட்டிருக்க வேண்டும்? அதில் சற்று சரிவைச் சந்தித்திருக்கிறது கங்குவா. படமாக இல்லாமல், படத்துக்கு முந்தைய நிலையான எழுத்தில் பார்த்தால், சரியாக வந்துள்ளது என்றே தெரியும்.
அப்படியானால் படத்தில் ஏன் வெளிப்படவில்லை?
ஒரு கதையைச் சொல்ல 2.30 மணி நேரம் மட்டுமே இயக்குநருக்கு உள்ளது. இதற்குள் எந்தக் கதையைச் சொல்ல முடியுமோ அதைச் சொல்ல வேண்டும். இந்த எல்லையைத் தாண்டி, பல ஆழமான விவகாரங்களைக் கொண்ட நிறைய உலகங்களை உள்ளடக்கிய கதையாக கங்குவா அமைந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. இது நிகழும்போது, நிறைய விஷயங்கள் நமக்குள் ஆழமாகப் பதிவாகாது. இந்த இடத்தில் தான் கங்குவா சிக்கியிருப்பதாகத் தெரிகிறது.
கதைக்குள் ஏற்கெனவே நிறைய உலகங்கள் உள்ளன. அதற்கு நிறைய மெனக்கெடல் தேவை. இதுபோதாது என்று, பிரமாண்டமாகக் காட்ட வேண்டிய பொறுப்பும் இயக்குநருக்கு உள்ளது. இதனால், சில இடங்களில் இதிலும் கவனம் சென்றுள்ளது. இதன் காரணமாகவே, பார்வையாளர்களுக்கு மையக் கரு மீது இருந்திருக்க வேண்டிய ஒரு பிடிப்பு, பல இடங்களில் பிரிந்துக் கிடக்கிறது. மையக் கருவின் உணர்வு சரியாகக் கடத்தப்படாததால் படமும் சற்று பின்னடைவைச் சந்திக்கிறது.
இது ஏற்படுத்தும் மற்றொரு பாதிப்பு... படத்தின் நீளம் குறைவாக இருந்தாலும், இவ்வளவு நீளமாக இருக்கிறதே என்ற உணர்வு முதல் பாதியில் வந்துவிடுகிறது.
இவற்றைத் தாண்டியும் படத்தில் நிறைய விஷயங்கள் நன்றாக வந்துள்ளன. நிறைய பேர் முதலையுடனான சண்டைக் காட்சி பிடிக்கும் எனலாம். ஆனால், பெண்கள் சண்டையிடும் காட்சி ஒன்று படத்தில் உண்டு. இந்த சண்டைக் காட்சி சிறப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய இடங்களில் புல்லரிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டிய சண்டைக் காட்சிகள் சில இடங்களில் மட்டுமே ஏற்படுத்துகின்றன.
பின்னணி இசையில் டிஎஸ்பி, தான் யார் என்பதைக் காட்டியிருக்கிறார். புஷ்பா அளவுக்குப் பாடல்கள் இல்லை என்ற முனுமுனுப்பு பட வெளியீட்டு முன்பு இருந்தன. ஆனால், படத்தில் உழைப்பைப் போட்டிருப்பது தெரிகிறது. இந்தக் கதைக்கு எந்த மாதிரியான இசை தேவையோ அதைக் கொடுத்துள்ளார். என்ன, கொஞ்சம் கூடுதல் சப்தத்துடன் போட்டுவிட்டாரோ என்ற விமர்சனம் மட்டும் உண்டு.
இசையைத் தாண்டி படமே நிறைய சப்தமாக இருக்கிறது. படத்தில் நிசப்தம் என்று ஒரு நொடிகூட இல்லை. சூர்யா மட்டுமின்றி அனைத்துக் கதாபாத்திரங்களும் கத்திக்கொண்டே இருக்கிறது. 2.30 மணி நேரமும் இப்படி இருந்தால் ஒருவித சலிப்பு வரும். அது கங்குவாவில் வந்துவிடுகிறது.
இருவேறு உலகங்களிலும் இருப்பது சூர்யா மற்றும் சிறுவன் கதாபாத்திரம் என்பதால், இவர்களைத் தவிர மற்றவர்கள் பெரிதளவில் மனதில் நிற்கவில்லை. மாற்றுமொழி நடிகர்கள் வில்லனாக வரும்போது, அவர்களுக்கென்று வலுவான கதாபாத்திரம் இல்லாமல், வெறும் ஷாட்களிலும் வசனங்களிலும் மட்டுமே மாஸ் சேர்த்திருப்பார்கள். இந்த வழக்கம் கங்குவாவில் பாபி தியோலுக்கும் தொடர்கிறது.
நட்டி, போஸ் வெங்கட் போன்றவர்களுக்கு மட்டுமே ஓரளவுக்குக் காட்சிகள் உள்ளன. கருணாஸ் ஒரு முக்கியத் தருணத்தில் பெரும் உணர்வைக் கடத்தக்கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும், மற்ற காட்சிகளில் அவருக்கு இடமில்லை. வெறும் பில்டப்புகளை ஏற்றுகிறார். சூர்யா தவிர்த்து மற்ற கதாபாத்திரங்கள் மனதில் நின்றால், அது அபூர்வம் தான்.
முன்பே கூறியதுபோல இரு வருடங்களுக்குப் பிறகு சூர்யா திரையரங்குகளுக்கு வருகிறார். அதற்கான சரியான படமாக கங்குவா அமைந்துள்ளது. ரசிகர்களுக்கு விருந்து அளிக்கக்கூடிய வகையில் நிறைய சண்டைக் காட்சிகளுடன் இரு கதாபாத்திரங்களில் அசத்தியிருக்கிறார். இருந்தாலும், படத்தின் மையக் கரு கடத்த வேண்டிய உணர்வு சரியாகக் கடத்தப்பட்டிருந்தால், சூர்யாவின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத முயற்சியாக கங்குவா அமைந்திருக்கும். பான் இந்தியா சாதனைகளை நிச்சயமாக முறியடித்திருக்கும்.
ஒட்டுமொத்தமாக இரண்டரை மணி நேரப் படமாக கங்குவா எப்படி உள்ளது என்றால்? மையக் கருவில் சறுக்கியதால், அட்டகாசமானப் படமாக வந்திருக்க வேண்டிய கங்குவா, மிகுந்த சப்தத்துடன் சாதாரணமான மற்றொரு தமிழ்ப் படமாக மட்டுமே வந்துள்ளது.