
ஊடகங்களுக்கு நல்ல தீனி கிடைத்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
முன்னதாக, மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்த நிலையில், சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதன் பிறகு சித்திக் மீது புகார் எழுப்பிய மலையாள நடிகை ரேவதி சம்பத், நடிகர் ரியாஸ் கான் மீதும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து மலையாளத் திரையுலகில் மேலும் பல பாலியல் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் இது குறித்து மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபியிடம் கேள்வி எழுப்பிய போது, “பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும்.
ஊடகங்களுக்கு நல்ல தீனி கிடைத்துள்ளது. இதை வைத்து நிறைய பணம் சம்பாதிக்கலாம்.
ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன. இது தொடர்பாக எழுப்பப்பட்ட புகார்கள் தற்போது குற்றச்சாட்டு வடிவில் உள்ளன.
இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ஊடகங்களுக்கு இருக்கிறதா?” என்று தெரிவித்துள்ளார்.