நல்ல இயக்குநர்கள் பட்டியலில் என் பெயர் இருக்காது: சுந்தர். சி ஆதங்கம்

"இவ்வளவு ஹிட் கொடுத்தாலும், அதற்குரிய ஒரு நிலை எனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் மனதில் இருக்கும்."
நல்ல இயக்குநர்கள் பட்டியலில் என் பெயர் இருக்காது: சுந்தர். சி ஆதங்கம்
1 min read

தொடர் வெற்றிகளைக் கொடுத்தாலும், நல்ல இயக்குநர்கள் பட்டியலில் என் பெயர் இருக்காது என இயக்குநர் சுந்தர். சி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சுந்தர். சி, விஷால், சந்தானம் கூட்டணியில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான மதகஜராஜா, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பொங்கல் வெற்றி என்று சொல்லும் அளவுக்கு மதகஜராஜா ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினரால் இன்று விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில், இயக்குநர் சுந்தர். சியிடம் கமெர்ஷியல் பட இயக்குநர் என்று சொல்லும்போது, உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமா? எப்படி உணர்வீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

"மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், ஒரு வகையில் வருத்தமாக இருக்கும். கமெர்ஷியல் படம், பெரிய வெற்றியடையும், மக்கள் ரசிப்பார்கள், படத்துக்கும் நல்ல கூட்டம் வரும்... இருந்தாலும்கூட எனக்குள் ஓர் உணர்வு இருக்கும்.

இதற்கானப் பெரிய பாராட்டுகள் இருக்காது. நல்ல இயக்குநர்கள் எனப் பட்டியலிட்டால், இவ்வளவு ஹிட் கொடுத்தும் அதில் என் பெயர் இருக்காது. அன்பே சிவம் வேறொரு மாறுபட்ட படம்.

என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது பெரிய வணிகம். லட்சக்கணக்கானவர்களை உள்ளடக்கிய, அவர்களுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய ஒரு வணிகம் அது. மிகப் பெரிய பொழுதுபோக்கு சாதனம். அதுமட்டுமில்லாமல் கோடிக்கணக்கான மக்கள் நம்மை நம்பி காசு கொடுத்து மூன்று மணி நேரம் கவலைகளை மறந்து இருக்க வருகிறார்கள். அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பது என்னுடையப் பெரிய ஆசை.

என்னதான் கமெர்ஷியல் பட இயக்குநர் என்ற அடையாளம் இருந்தாலும், கடவுள் அருள் மற்றும் மக்கள் ஆதரவு மூலம் 30 வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு ஹிட் கொடுத்தாலும், அதற்குரிய ஒரு நிலை எனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் மனதில் இருக்கும். ஆனால், அதுபற்றி கவலைப்படுவதில்லை நான்.

என் கடன் பணி செய்து கிடைப்பதே என்பதுதான் என்னுடையக் கொள்கை" என்றார் சுந்தர். சி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in