திரையரங்குகளில் வெளியாவது ஜெயிலர் 2 ப்ரமோ?

இரு ப்ரமோக்களுக்கு படக் குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
திரையரங்குகளில் வெளியாவது ஜெயிலர் 2 ப்ரமோ?
ANI
1 min read

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் திரையரங்குகளில் திரையிடப்படும் ப்ரமோக்கள் ஜெயிலர் 2 படத்துடைய அறிவிப்பு டீசர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், நெல்சன் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வெற்றியைப் பெற்றது ஜெயிலர். 2023-ல் வெளியான இந்தப் படம் சுமார் 600 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து ஜெயிலர் 2 குறித்த பேச்சுகள் அவ்வப்போது இருந்து வந்தன. திரைத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ஜெயிலர் வெற்றிக்குப் பிறகு ஜெயிலர் 2 குறித்து நெல்சன் மற்றும் சன் பிக்சர்ஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், நெல்சன் இதில் ஒப்பந்தமானதாகவும் தெரிவித்தார்கள்.

எனினும், படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்ததால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல் உறுதிபடுத்தப்படாமலே இருந்தது. மேலும், ஜெயிலர் 2 படத்துக்கான ப்ரமோ காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் டிசம்பர் 12 அன்று ரஜினியின் பிறந்தநாளன்று வெளியாகலாம் என்றும் பின்னர் கூறப்பட்டது. ஆனால், மீண்டும் தகவல் இல்லை.

இவற்றின் தொடர்ச்சியாக ஜனவரி 11 முதல் சன் பிக்சர்ஸ் அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியது. புதிய பயங்கரமான அறிவிப்புகளுக்குத் தயாராகுங்கள் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த 11 அன்று ரசிகர்களைத் தயார்படுத்தத் தொடங்கியது. தொடர்ந்து ஜனவரி 12 அன்று வெளியான அறிவிப்பில், புதிய படம் குறித்த அறிவிப்பு டீசர் ஜனவரி 14 அன்று மாலை 6 மணிக்குத் திரையரங்குகளில் திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சென்னை, திருநெல்வேலி, கோவை, பெங்களூரு, திருவனந்தபுரம், பாலக்காடு, மும்பை ஆகிய ஊர்களில் குறிப்பிட்ட திரையரங்குகளில் அறிவிப்பு டீசர் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

எந்தப் படத்தின் அறிவிப்பு என சன் பிக்சர்ஸ் குறிப்பிடாதபோதும், இது ஜெயிலர் 2 என ரசிகர்களால் ஊகிக்கப்பட்டது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக, ஜெயிலர் 2 அறிவிப்பு டீசரை திரையரங்குகளில் வெளியிடுவதற்கான சென்சார் சான்றிதழ் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இரு ப்ரமோக்களுக்கு படக் குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முதல் ப்ரமோ 2 நிமிடங்கள் 23 விநாடிகள் மற்றும் இரண்டாவது ப்ரமோ 4 நிமிடங்கள் 3 விநாடிகள் என்ற அளவில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in