
கர்நாடகத்தில் தக் லைஃப் திரையிடப்படுவதை அம்மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ் மொழியிலிருந்து கன்னடம் உருவானதாக கமல் ஹாசன் கூறியதால் எழுந்த சர்ச்சை காரணமாக, தக் லைஃப் கர்நாடகத்தில் வெளியாகவில்லை. கமல் ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், தக் லைஃப் திரையிடப்படுவதற்கு எதிராக அச்சுறுத்தல்களைக் கிளப்பினார்கள். கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபையும் படத்தை கர்நாடகத்தில் திரையிடப்போவதில்லை என அறிவித்தது.
கர்நாடகத்தில் தக் லைஃப் படத்தைத் திரையிடுவதற்கான அனுமதிகோரி, மஹேஷ் ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தொடர்ந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
"குண்டர்கள் வீதிகளைக் கைப்பற்றுவதை அனுமதிக்க முடியாது. சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும். தணிக்கை சான்றிதழ் பெற்ற எந்தப் படமாக இருந்தாலும், அது வெளியாக வேண்டும் என சட்டத்தின் ஆட்சி வலியுறுத்துகிறது. தக் லைஃப் திரையிடப்படுவதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும். தணிக்கை சான்றிதழைப் பெற்ற பிறகு ஒருவர் படத்தை வெளியிட விரும்பினால், அவர் படத்தைத் திரையிடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். சட்டத்தின் ஆட்சி என்பது முக்கியமானது" என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம் வழக்கை ஜூன் 19-க்கு ஒத்திவைத்துள்ளது.
வழக்கு விவரம்:
கமல் ஹாசன், மணி ரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் கடந்த 5 அன்று வெளியானது. கர்நாடகத்தில் மட்டும் படம் வெளியாகவில்லை. தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் மொழியிலிருந்து கன்னடம் உருவானதாக கமல் ஹாசன் பேசியது சர்ச்சையானது. இவ்விவகாரத்தில் கமல் ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகத்தில் தக் லைஃப் திரையிடப்படாது என கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபை எச்சரிக்கை விடுத்தது. கமல் ஹாசன் மன்னிப்பு கேட்க மாட்டேன் என உறுதியாக இருந்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார்.
இதனிடையே, கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபைக்கு கமல் ஹாசன் கடிதம் எழுதியிருந்தார். அதில் மன்னிப்பு இடம்பெறவில்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியது.
கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தும்வரை தக் லைஃப் படத்தை வெளியிடப்போவதில்லை என்றும் கமல் ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு கர்நாடக உயர் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்ததால், தக் லைஃப் ஜூன் 5 அன்று கர்நாடகத்தில் வெளியாகவில்லை.