
மகேஷ் பாபு படத்துக்காக உருவாக்கி வரும் உலகின் சிறு அறிமுகத்தை நவம்பர் 2025-ல் வெளியிடவுள்ளதாக இயக்குநர் ராஜமௌலி அறிவித்துள்ளார்.
ஆர்ஆர்ஆர் வெற்றிக்குப் பிறகு மகேஷ் பாபுவுடன் கைக்கோர்த்துள்ளார் ராஜமௌலி. மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் சில பகுதிகள் ஒடிஷாவில் படம் பிடிக்கப்பட்டது. இப்படம் 2027-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகேஷ் பாபு இன்று தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு படம் பற்றிய அறிவிப்பொன்றை ராஜமௌலி வெளியிட்டுள்ளார். மகேஷ் பாபுவும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதைப் பகிர்ந்துள்ளார்.
மகேஷ் பாபுவின் முகம் தெரியாதவாறு படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் பதிவுக்கு முன்பு, படத்தின் அறிமுகம் ஒன்றை நவம்பர் 2025-ல் வெளியிடவுள்ளதாக ராஜமௌலி அறிவித்தார்.
இதுதொடர்புடைய எக்ஸ் தளப் பதிவில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"இந்தியா மற்றும் உலகம் முழுக்க உள்ள சினிமா பிரியர்கள் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு...
நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்கி சில காலம் ஆகிறது. படம் குறித்து தெரிந்துகொள்ள உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பாராட்டுகிறோம். எனினும், கதை மற்றும் படத்தின் அம்சங்கள் மிகவும் ஆழமாக இருப்பதால், வெறும் புகைப்படங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகள் அதற்கு நியாயம் சேர்க்காது என நம்புகிறேன்.
நாங்கள் உருவாக்கி வரும் உலகின் சிறு அறிமுகத்தை உங்களுக்குக் காட்டுவதற்கானப் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். இது நவம்பர் 2025-ல் வெளியிடப்படும். இதுவரை பார்த்திராத ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக முயற்சித்து வருகிறோம். உங்களுடைய பொறுமைக்கு நன்றி" என்று ராஜமௌலி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுவரை இப்படம் எஸ்எஸ்எம்பி29 என்ற ஹேஷ்டேக்கில் குறிப்பிடப்பட்டு வந்தது. தற்போது குளோப் ட்ராட்டர் என்று குறிப்பிடப்பட்டு வருகிறது.
Rajamouli | SS Rajamouli | Globe Trotter | Mahesh Babu |