நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவு: தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை | Gouri Kishan |

எங்கள் சகோதரிக்கு நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்....
தென்னிந்திய நடிகர் சங்க கண்டன அறிக்கை (இடது), நடிகை கௌரி கிஷன் (கோப்புப்படம்)
தென்னிந்திய நடிகர் சங்க கண்டன அறிக்கை (இடது), நடிகை கௌரி கிஷன் (கோப்புப்படம்)
2 min read

நடிகை கௌரி கிஷனுக்கு நடந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதர்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கதாநாயகி நடிகை கௌரி கிஷனிடம் அவரது உடல் எடை குறித்து யூடியூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குக் கடுமையான பதிலளித்த கௌரி கிஷன், “என் உடல் எடையைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படிக் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை ஏன் கேட்கிறீர்கள்?” என்று பதிலளித்தார். ஆனால் அதன்பின்னர் பெரும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இச்சம்பவத்தின் காணொளி இணையத்தில் பரவி வைரலானது.

இதில், கௌரி கிஷனுக்கு ஆதரவுக் குரல்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், தென்னிந்திய நடிகர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

“திரைத்துறையும் பத்திரிகைத்துறையும் பிரிக்கவே முடியாத சகோதரர்கள். நல்ல திரைப்படங்களையும் திறமையான கலைஞர்களையும் உச்சி முகர்ந்து கடைக்கோடி மக்களிடமும் கொண்டு சேர்க்கும் நீங்கள், நாங்கள் தவறு செய்யும் போதும் சரியான விமர்சனங்களை மிகவும் நாகரிகமாக வெளிப்படுத்தி சரி செய்தும் வருகிறீர்கள். நேற்று நிகழ்ந்த இந்த நிகழ்வு மிகவும் விரும்பத் தகாதது.

தமிழ் திரையுலகம் எப்போதுமே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகவே விளங்கி வருகிறது. 75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் திரையுலகில் பெண்கள் நடிகைகளாக மட்டும் அல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் ஒளிப்பதிவாளராகவும் பிரகாசித்துள்ளனர். ஆனாலும் திரைத்துறையில் ஒரு பெண் நுழைந்து சாதிப்பது என்பது இன்னமும் பெரும் சவாலான ஒன்றுதான். அப்படி பெரும் சவாலை ஏற்று ஏதாவது ஒன்றை சாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பெண்கள் திரைத்துறைக்கு அடி எடுத்து வைக்கின்றனர். அப்படி திரைத்துறைக்கு வரும் பெண்களை அவர்களுக்கான பாதுகாப்பையும் அவர்கள் தன்மானத்தையும் சுய கௌரவத்தையும் பாதுகாப்பது என்பது நம் எல்லோரது கடமையும் கூட.

ஆனால் பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒரு சில வக்கிரமான நபர்கள் பத்திரிக்கையாளர்கள் போர்வையில் நடிகைகளை பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பதும் அவமானப்படுத்துவது கவலை அளிக்கிறது. நேற்று எங்களது சகோதரி ஒருவருக்கு நிகழ்ந்த நிகழ்வு அதே நபரால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு சகோதரிக்கும் நிகழ்ந்தது. இன்றைய சூழலில் செல்போன் இருந்தால் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து பத்திரிக்கையாளர் ஆகிவிடலாம், திரைத்துறையினர் பற்றி அவதூறுகளை ஆபாசமாக பரப்பி பார்வையாளர்களை பெற்று விடலாம் என்ற மோசமான நிலை நிலவுகிறது. இந்த சூழலில், எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பத்திரிக்கை துறையில் இது போன்ற களைகள் முளைத்திருப்பது நாம் அனைவரும் ஒன்று கூடிப் பேசி சரியான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று எங்கள் சகோதரிக்கு நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இனி எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கலந்து ஆலோசிக்க தொடங்குவோம். தேவையான முன்னெடுப்புகளைத் தொடங்குவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The South Indian Artistes Association has released a statement strongly condemning the incident involving actress Gauri Kishan during 'Others' movie press meet.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in