
பிரபல யூடியூபர்களான கோபி - சுதாகர் தங்களுடைய பரிதாபங்கள் சேனலில் அண்மையில் வெளியிட்ட காணொளி 'சொசைட்டி பாவங்கள்'. சமூகத்தில் நிலவும் சூழல்கள் மற்றும் அடையும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து அதைப் பகடி செய்வதில் கோபி மற்றும் சுதாகர் வல்லவர்கள்.
'சொசைட்டி பாவங்கள்' காணொளியில் இடைநிலை சாதிகளின் ஆணவத்தைச் சாடி பகடி செய்திருந்தார்கள். குறிப்பாக, அடுத்த தலைமுறை இளைஞர்களின் அட்டூழியங்கள் மற்றும் அவல நிலையை பிரதியெடுத்திருந்தார்கள். வெறுமன பகடி செய்வதோடு இல்லாமல் இளைஞர்கள் யாரால் பாதிக்கப்படுகிறார்கள், அவர்களைத் தூண்டிவிடும் சாதிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுடைய நோக்கம் என்ன என்பதையும் தோலுரித்துக் காட்டியிருந்தார்கள்.
ஆகஸ்ட் 4 அன்று வெளியான இந்தக் காணொளி, ஆகஸ்ட் 6 பிற்பகல் நிலவரப்படி 34.75 லட்சம் பார்வைகளைக் கடந்து ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தக் காணொளிகளை லைக் செய்துள்ளார்கள். சுமார் 22,700-க்கும் மேற்பட்டோர் காணொளியின் கீழே கமெண்ட் செய்துள்ளார்கள்.
இந்தக் காணொளி எப்போது வேண்டுமானாலும் அச்சுறுத்தல் காரணமாக நீக்கப்படலாம் என்று கூறியே அனைவரும் தங்களுடைய சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து வந்தார்கள். அண்மையில், திருநெல்வேலியில் கவின் என்ற ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இதையொட்டி இந்தக் காணொளி வெளியாகியிருப்பது வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. முற்போக்குச் செயற்பாட்டாளர்களும் இதன் மையக் கருத்தைப் பாராட்டியுள்ளார்கள்.
சொசைட்டி பாவங்களில் இடம்பெற்றுள்ள முக்கிய வசனங்கள்:
அவங்க அப்பா பஸ் ஸ்டாண்ட் வாசல்ல பொரிகடலைக் கடை போட்டிருந்தாரு... அவங்க ஐயா பொண்டாட்டி சோறு போடலைனு வள்ளலார் மடத்துலபோயி சோத்த வாங்கி தின்னுட்டு அங்கேயே படுத்துருந்தாரு... இவங்களுக்கு என்னய்யா வரலாறு...?
*****
வெள்ளை சட்டை... கையில காப்பு... குங்குமம்... வெள்ளைச் சட்டைக்கு ஜீன்ஸ் பேண்ட்... என்னடா இது..? ஆதிக்க குரூப்போட ஸ்டார்ட்டர் பேக் மாதிரி வந்துருக்கியே..
*****
இருக்கற பசங்களுக்கு, நம்ம கம்யூனிடிலேயே ஃப்ரீயா படிக்க வைக்கலாம், லேப்டாப் வாங்கிக் கொடுக்கலாம்.. இல்லை, ஐ.டி.க்குப் போறாங்கனா அதுல சேர்த்துவிடலாம். எதுவுமே இல்லையா... ஐடிஐல சேர்த்துவிட்டு ஃபிட்டர் வேலைக்காச்சும் அனுப்பலாம்.
*****
எந்த குரு பூஜையையோ பண்ணிட்டு போங்கடா... அலப்பறையைக் காட்றதுக்கு ஏன் வண்டிய அப்யூஸ் பண்றீங்க? வண்டி விண்ட் ஷீல்ட்ல போட்டோ ஒட்டி வைச்சா எப்படிடா எதிர்ல வர்றவன் தெரிவான்?
*****
நீ இருக்கற அதே கம்யூனிட்டி தான் நானும்... அவன் யார லவ் பண்ணா எனக்கென்ன...! நீ என்னமோ இந்த கம்யூனிட்டிக்கு ரெப்ரசன்டேடிவ் மாதிரி அவனப் போட்டு ஏண்டா ஏத்திவிட்டுட்டு இருக்க...
*****
உலகம் ரொம்பப் பெருசு... இந்தப் பக்கம் பஸ் ஸ்டாண்டு, இந்தப் பக்கம் டாக்ஸி ஸ்டாண்டுனு வாழ்க்கைய முடிச்சுராதீங்கடா... ஆஸ்திரியாவோட கேபிடல் எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா... ஸ்காட்லாந்து தெரியுமா... சம்பாதிச்சு இந்த மாதிரி உலகத்த சுத்தி பாருங்க... உலகம் ரொம்பப் பெருசுடா...
*****
நீ உள்ள போ... அண்ண வெளிய இருந்து காப்பாத்தணும் இல்லையா?
இவன் பேக் அடிப்பான்னு நான்தான் சொன்னேன்ல... இவன்தான் ரே மிஸ்டீரியோவ விட அதிகமா ஜம்ப் பண்ணக்கூடிய ஆளுடா... இவனைப்போயி நம்பி கொலை பண்ணிட்டு வந்துருக்கியே... அவன் வாழ்க்கைய நாசப்படுத்துனது இல்லாம உன் வாழ்க்கையும் போயிருச்சேடா..
*****
அண்ணே, இதைப் பாத்துட்டு இன்னொரு இனத்துல ஒரு பொண்ணு, கல்யாணம் பண்றதுக்கோ, லவ் பண்றதுக்கோ யோசிக்கும் இல்லை அண்ணே!
ம்க்கும்... அதெல்லாம் யாரும் யோசிக்க மாட்டாங்க. அவ்வளவுதான்.. ஊ... ஊ...
*****
மிளகாய்ப் பொடிய எடுத்து மூஞ்சில அடிச்சுட்டு, முதுகுல குத்தி கொன்றுக்கு மூதேவி... இதுக்கு வீரம்னு பில்டப்பு வேற...
இவ்வளவு நீளத்துக்கு அரிவாள வாங்கி வச்சுட்டா அவனெல்லாம் வீரனாய்யா... எங்க வீட்ல கூட தான் தேங்காய் வெட்றதுக்கு அரிவாள் இருக்கு... நாங்க எடுத்து ஃபோட்டோ போட்டா வீரமா?
*****
நல்ல அத்லட்டா வந்து... நல்ல வேலைல போயி செட்டில் ஆக வேண்டியவன்... எவனோ ஏத்திவிட்டிருக்கான்... வெட்டிட்டு இவன் ஜெயிலுக்கு போயிட்டான்... இவன் வாழ்க்கையும் முடிஞ்சு போச்சு... செத்தவன் வாழ்க்கையும் முடிஞ்சு போச்சு... ஏத்திவிட்டான் பாருங்க... அவன் நிம்மதியா இருப்பான்... அவன் வீட்டுல எதாவது நடந்துச்சுனா, கம்முனு போயிருவாங்க...
*****
Gopi Sudhakar | Parithabangal | Gopi | Sudhakar | Society Paavangal | Caste