
‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் விஜயுடன் 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடியாக நடிக்கிறார் சினேகா.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் இரண்டாம் பார்வை சமீபத்தில் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து மேலும் ஒரு தகவலாக இப்படத்தில் சினேகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்ட சினேகா பேசியதாவது:
“விஜயுடன் நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளேன். மேலும் அவருடன் ஜோடி சேர்வதால் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அவர் ஒரு அருமையான நபர். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரை பார்த்தவுடன், எப்படி ஒரே மாதிரி தோற்றமளிக்கிறீர்கள் என கேட்டேன். அவரும் திரும்ப அதே கேள்வியை என்னிடம் கேட்டார். விஜய் தன்னுடைய ரசிகர்களை அதிகம் நேசிக்கிறார். அதே போல் அவர்கள் மீது விஜய்க்கு அதிக மரியாதை உண்டு” என்றார்.
2003-ல் விஜய் மற்றும் சினேகா ஆகியோர் இணைந்து ‘வசீகரா’ படத்தில் நடித்தனர். 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகின்றனர்.