
நாட்டுக்காக உயிர் கொடுத்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படம். சிறுவயது முதலே ராணுவத்தில்தான் சேர வேண்டும் என்ற ஆசைக்கு வெகுளித்தனமான காரணம் இருந்தாலும், வாழ்வின் போக்கில் நாட்டுக்காகப் பணி செய்வதே சரி என்ற முக்கியமான முடிவை எடுப்பதும், அதற்காகத் தன்னை தயார் செய்வதுமாகக் கதை ஆரம்பிக்கிறது.
ஒரு கட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்து விடுகிறார் முகுந்த். முதல்படியாக லெஃப்டினன்ட் ஆகவும் அடுத்தபடியாக கேப்டனாகவும், அடுத்தக் கட்டமாக மேஜராகவும் படிப்படியாக வளர்ச்சி காண்கிறார்.
தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றும் டெம்ப்ளேட் கதை என்றாலும் ராணுவத்தில் வீரர்களின் குடும்ப வாழ்க்கைச் சூழல், அவர்களுடைய குடும்பத்தினரின் ஏக்கம், பாசம், பிரிவு, இதைத் தாண்டி ராணுவ வீரர்களிடையேயான சிறுசிறு விளையாட்டுகள், எந்நேரமும் போருக்குத் தயார் நிலையில் இருக்க வேண்டியதன் தேவை, ராணுவ வீரர்களின் வாழ்வு முறை, ராணுவ வீரருக்கான பொறுப்புகள், வலிகள் என்று முழுக்க முழுக்க ராணுவ வீரர்களுக்கான உலகத்துக்குள் நம்மை இழுத்துச் சென்றுவிடுகிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
இந்தப் படம் இப்படித்தான் இருக்கும் என்று நமக்கு முதலிலியே ஒரு சித்திரம் உருவாகிறதல்லவா, அப்படியே தான் படமும் நகர்கிறது.
முகுந்த் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவி. அவரின் கதைச் சொல்லலில் தான் படம் தொடங்குகிறது. அதன் வழியே முகுந்தின் ராணுவ முகாமுக்குள் நாமும் நுழைகிறோம்.
படத்தில் முதல் 50 நிமிடம் இதுவரை தமிழ் சினிமா பார்த்துப் பழகிய காட்சிகளாகவே உள்ளன. உண்மைக் கதையை எடுப்பதில் உள்ள சிக்கல் இது. திரைக்கதை சுவாரசியத்துக்காக ஏதேனும் கூடுதலாக சேர்த்தாலோ குறைத்தாலோ அந்த உண்மை அடிபட்டு விடும் அபாயம் உண்டு. அதுவும் இது இறந்து போன ராணுவ வீரரின் கதை. சுவாரசியத்தை விடவும் உண்மைத்தன்மை காப்பாற்றப்படாமல் போனால் குடும்பத்தினர் மட்டும் கேள்வி கேட்க மாட்டார்கள். டங்கல், சூரரைப் போற்று போன்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் கொஞ்சம் கற்பனையையும் கலந்து எடுக்கப்பட்டன. ராஜ்குமார் பெரியசாமிக்கு அந்தச் சுதந்திரம் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி முதல்முறையாக ஒன்றாக நடித்திருக்கிறார்கள். இதனால் பழைய காட்சியாக நமக்குத் தோன்றுபவை எல்லாம் இவர்களால் புதிதாகத் தோற்றமளிக்கின்றன.
ராணுவ வீரன் தன் குடும்பத்தைப் பிரிந்து வருந்துகிறான் என்பதை ஒருமுறை சொன்னால் நாமும் அவனுக்காக மனம் உருகுவோம். அதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தால்...?
முதல் பாதியில் மட்டுமில்லாமல் 2-வது பாதியிலும் இந்தத் தொலைதூர உறவில் இருக்கும் சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் நீ எப்ப வருவ, உன்னைப் பாக்கணும் போல இருக்கு போன்ற வசனங்களையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். அவர்களுடைய குழந்தையும் அதையே திரும்பத் திரும்பக் கேட்கிறது.
உயிர்த் தியாகம் செய்கிற ராணுவ வீரர் கதாபாத்திரத்திலும் இந்தக் கதையைத் தாங்கும் வலுவுள்ள கதாநாயகனாகவும் சிவகார்த்திகேயனை கமல் நம்பியிருக்கிறார். அவரும் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். சிவகார்த்திகேயனால் தீவிரமான கதையில் உடலை வருத்தி நடிக்கமுடியும் என்பதற்குச் சான்றாக இப்படம் அமைந்துள்ளது.
சாய் பல்லவியின் நடிப்பு சற்று மிகையாக இருப்பதாகவும் எனக்குத் தோன்றியது. அதீதமான உணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தில் பெரிதாக அழுத்தம் இல்லாமல் சொன்ன விஷயத்தையே மீண்டும் மீண்டும் சொல்லவேண்டிய கட்டாயம். இக்கதாபாத்திரம் இன்னும் நன்றாக எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு ராணுவ வீரரின் கதையில் கதாநாயகிக்கு எத்தகைய வலுவாக கதாபாத்திரம் கிடைக்கும் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
படத்தின் மைய முரணைச் சரியாகக் கையாளவில்லை. தீவிரவாதிகளால் இந்திய ராணுவம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். இந்திய ராணுவம் எதிர்கொள்ளும் தீவிரவாதிகள் யார்? அவர்கள் ஏன் தீவிரவாதிகள் ஆனார்கள்? அவர்கள் வைக்கும் கோரிக்கை என்ன? ராணுவம் சுட்டுக்கொள்ள நினைக்கும் தீவிரவாதியை பொதுமக்களில் சிலர் காப்பாற்றுகிறார்கள். இது எப்படிச் சாத்தியம்?
இவை எதையுமே சரியானமுறையில் உரையாடலுக்குள் உட்படுத்தவில்லை. ஷிவ் அரூர் - ராகுல் சிங் எழுதிய 'India’s most fearless' என்கிற புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான் அமரன். இந்திய ராணுவம் இந்தியப் படங்களில் இதுவரை எப்படிக் காட்டப்பட்டதோ அதனுடைய புனித பிம்பம் கொஞ்சமும் கலங்காமல் இதில் வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் இயக்குநரின் முக்கியச் சவால். அதனால் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைத் தொகுப்பாகத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் பக்கமிருந்து கதையும் பிரச்னைகளும் பார்க்கப்பட்டுள்ளன.
இறுதி 20 நிமிடங்கள் நெஞ்சைக் கனக்க வைக்கும் அளவுக்கு உணர்வுபூர்வமாக உள்ளது. முகுந்த் வரதராஜனின் மரணம் வீர வரலாறாகிறது. படம் முடியும்போது திரையரங்கில் பார்வையாளர்களிடையே மிகப்பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பு உண்டாவதைப் பார்க்க முடிந்தது. இதன் அடிப்படையில் படத்தின் நோக்கமும் நிறைவேறுகிறது.
- கௌதம்