
தனது தந்தைக்கும் மேஜர் முகுந்துக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி போன்றோர் நடிக்கும் படம் ‘அமரன்’. இசை - ஜி.வி. பிரகாஷ் குமார். தயாரிப்பு - ராஜ்கமல் நிறுவனம்.
இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை குறித்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார்.
இப்படம் அக்டோபர் 31 (தீபாவளி) அன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், தனது தந்தைக்கும் மேஜர் முகுந்துக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் பேசியதாவது
இந்த கதையில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்பதற்கு ஒரு முக்கியமான காரணம் என் தந்தை. சிறுவயது முதல் அவர் அணிந்த காக்கி சீருடையைப் பார்த்து வளர்ந்தேன். அமரன் படத்துடனான பயணத்தில், என் தந்தைக்கும் மேஜர் முகுந்துக்கும் உள்ள நிறைய ஒற்றுமைகளை என்னால் பார்க்க முடிந்தது. இப்படத்தில் நடித்ததற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்.
மேலும், இப்படத்தை கமல் காண்பார் என்பதும் ஒரு காரணம். இதற்கு முன்பு அவர் என் படங்களை பார்த்திருக்கிறாரா என்று தெரியவில்லை. எதை செய்தாலும் அதனை சரியாக செய்பவர் அவர். எனவே ஒரு தயாரிப்பாளராக படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும். மேலும், மேஜர் முகுந்தை தெரிந்தவர்களும் இப்படத்தை காண்பார்கள் என்பதால், படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே பொறுப்புடன் பணியாற்றினேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.