நான் யாரையும் கண்டுபிடித்து அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்ல மாட்டேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற படம் ‘கூழாங்கல்’. இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கிய இப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
இப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில் ‘கொட்டுக்காளி’ ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் ‘கொட்டுக்காளி’ படக்குழுவினருடன் இணைந்து இயக்குநர்கள் மிஷ்கின், வெற்றிமாறன், லிங்குசாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:
“தமிழ் சினிமாவின் பெருமை வினோத். இப்படத்துக்கு நான் முதலீடு செய்தது போக, எனக்கு இப்படத்தின் மூலம் லாபம் வந்தால், அந்த தொகையை வினோத்ராஜிடம் அவரின் அடுத்த படத்துக்கான முன்பணமாக கொடுத்துவிடுவேன்.
மேலும் லாபம் கிடைத்தால் வினோத் ராஜ் போன்ற வேறு சில இயக்குநர்களைத் தேடி கண்டுபிடித்து வாய்ப்பு கொடுப்பேன்.
எஸ்.கே. தயாரிப்பு நிறுவனம் மூலம் இன்னும் நிறைய படைப்புகள் வரும். நான் யாரையும் கண்டுபிடித்து, இவர்களுக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். என்னை அவ்வாறு சொல்லி சொல்லி பழக்கப்படுத்திவிட்டார்கள். அது போன்ற நபர் நான் இல்லை.
ஒரு நண்பனை அறிமுகப்படுத்துவது போல தான் இதுவும். கொட்டுக்காளி படம் வெற்றியடைந்தால் இதுபோன்ற முயற்சிகள் மீண்டும் தொடரும்” என்றார்.
தனுஷின் ‘3’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அவர் வளர்ந்து வந்த நாட்களில் அவரிடம் பலரும் தனுஷ் தான் உங்களுக்கு வாழ்க்கை கொடுத்தாரா? என்ற கேள்வியை எழுப்பினர்.
இந்நிலையில் கொட்டுக்காளி டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது ரசிகர்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.