சுயமரியாதை மிகவும் முக்கியம்: சிம்ரன் காட்டம்!

என்னைப் பற்றி அவதூறு பரப்பியவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சிம்ரன்
சிம்ரன் @simranrishibagga
1 min read

தன்னைப் பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் சிம்ரன். இவர் நடித்த அந்தகன் படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் சிம்ரன் குறித்து சமூகவலைத்தளங்களில் ஒரு சில வதந்திகள் பரவி வந்த நிலையில், அதற்கான விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.

சிம்ரன் குறிப்பிட்டுள்ளதாவது

“உணர்வு ரீதியாக ஒருவர் பாதிக்கும் வகையில் சிலர் எப்படி பேசுகிறார்கள் என்பதை யோசித்துப் பார்க்கையில் மனவருத்தமாக உள்ளது.

இதுவரை நான் எந்த வதந்திகளுக்கும் பதிலளிக்காமல் இருந்தேன். ஆனால், இப்போது என்னைப் பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுக்க நினைக்கிறேன். நான் எந்த பெரிய நடிகர்களுடனும் இணைந்து பணியாற்ற ஆசைப்படவில்லை. வாய்ப்புகள் வந்தபோது நடித்திருக்கிறேன். இப்போது ஒரு பெண்ணாக என் இலக்குகள், என் வாழ்க்கை என அனைத்தும் மாறிவிட்டன.

சமூகவலைத்தளங்களில் எனது பெயரை, வேறு ஒருவருடன் இணைத்துப் பேசுவதைப் பல ஆண்டுகளாக சகித்துக் கொண்டு அமைதியாக இருந்தேன்.

ஆனால், சுயமரியாதை என்பது மிகவும் முக்கியம். எனவே, இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை இத்துடன் நிறுத்த வேண்டும் என்பதை அழுத்தமாகக் கூறிக்கொள்கிறேன்.

எனது உணர்வுகளை யாரும் புரிந்துகொள்ளவில்லை. என்னைப் பற்றி அவதூறு பரப்பியவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in