
இந்திய வீரர் விராட் கோலி தன்னை யார் என்று தெரியாது எனச் சொன்னதாக பழைய நிகழ்வு ஒன்றை சிம்பு நினைவுகூர்ந்து பேசியுள்ளார்.
மணி ரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் ஜூன் 5-ல் வெளியாகிறது. தக் லைஃப் படத்தின் விளம்பரப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தில் நடித்துள்ள கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அஷோக் செல்வன், அபிராமி உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்கள். நேர்காணல்கள் அளிக்கிறார்கள். மும்பை, ஹைதராபாத், கேரளம் என பயணம் மேற்கொள்கிறார்கள்.
விளம்பரப் பணிகளின் பகுதியாக ஐபிஎல் போட்டி நடைபெற்று வருவதால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழிலும் படக் குழுவினர் நேர்காணல் அளித்தார்கள். சிம்பு, த்ரிஷா, அபிராமி, அஷோக் செல்வன் உள்ளிட்டோர் கூட்டாக நேர்காணல் அளித்தார்கள். ஒவ்வொருவரிடம் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய கேள்விகள் கேட்கப்பட்டன. சிம்புவிடம் விராட் கோலி பற்றி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த சிம்பு, கோலியுடனான தனது சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்து பேசினார்.
"விராட் கோலி தான் அடுத்த சச்சின் டெண்டுல்கராக வருவார் என முன்பே கணித்தேன். கோலிக்கு ஆக்ரோஷம் அதிகம் என்பதால் இரு வருடங்களில் அணியிலிருந்து வெளியேறிவிடுவார் என பலர் என்னிடம் அப்போது கூறினார்கள். அதன்பிறகு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும். விராட் கோலி எந்த இடத்தை அடைந்துள்ளார் என்பதும் நமக்குத் தெரியும்.
அவர் வெற்றியாளராக மாறிய பிறகு ஓர் இடத்தில் அவரைப் பார்க்கிறேன். அவரிடம் பேசலாம்... நீங்கள் பெரிய வீரராக வருவீர்கள் என்பதை முன்பே கணித்தவன் நான் என்று பேசலாம் என நினைத்தேன். ஜாலியாக சென்று அவரிடம் ஹலோ என்றேன். நீங்கள் யார் என்று கேட்டார். நான் சிம்பு என்றேன். நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது என்று கூறி சென்றுவிட்டார்.
இது உனக்குத் தேவையா என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ஒரு நாள் நான் யார் என்பது உங்களுக்கு (கோலி) தெரிய வரும் அப்போது பார்த்துக்கொள்கிறேன் என அப்போது நினைத்துக்கொண்டேன்.
பிறகு, திடீரென்று அண்மையில் ஆர்சிபியின் ரீலை பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது. அன்று நாம் கூறினோம், இன்று கோலி நம் பாடலைச் சொல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்டோம். எனவே, வெற்றி தான். தற்போதும் அவருக்கு என்னைத் தெரியுமா எனத் தெரியவில்லை. அவர் பாடலை மட்டும் தான் கூறினார். அதில் என் புகைப்படம் உள்ளது. இருந்தாலும் சொல்கிறேன். எனவே, இந்தச் சம்பவம் மறக்க முடியாத சம்பவம்" என்றார் சிம்பு.