ஈழத் தமிழர்கள் மீதான அன்பை ஒரு பேட்டியில் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் வெளிப்படுத்தியுள்ளார்.
லண்டனில் வருகிற அக்டோபர் மாதம் பாடகர் சித் ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இது குறித்து சித் ஸ்ரீராம் தமிழ் கார்டியன் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
“நான் லண்டனில் நிகழ்ச்சி நடத்த ஈழ மக்கள் தான் காரணம். பெரும்பாலான நகரங்களில் ஈழ மக்களே என்னுடைய பாட்டை அதிகமாக ரசிக்கிறார்கள்.
அவர்களை ரசிகர்கள் என்று அழைப்பதைவிட எனது குடும்பம் என்றே அழைப்பேன். ஆரம்பம் முதல் அவர்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஈழ மக்களுக்காக, “ஒரு தெய்வம் தந்த பூவே”, “உந்தன் தேசத்தின் குரல்” ஆகியப் பாடல்களைப் பாடி அவர்களுக்காக அப்பாடல்களை அர்ப்பணித்தேன்.
இம்முறையும் அந்தப் பாடல்களைப் பாடுவேன். இப்பாடல்களைப் பாடும் போது ஒரு ஆழமான உணர்வு ஏற்படுகிறது. இப்பாடல்களைப் பாடுவதை எனது பொறுப்பாக உணரவில்லை, இயல்பாகவே என்னால் பாட முடிகிறது, அதனால் பெருமைப்படுகிறேன்” என்றார்.