
அபர்ணா சென் மீதான காதல் காரணமாகவே கமல் ஹாசன் வங்காள மொழியைக் கற்றுக்கொண்டதாக ஷ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படம் சமூக ஊடகங்களில் விமர்சனங்களைச் சம்பாதித்தாலும், திரையரங்குகளில் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. படத்தில் நடித்த நாகார்ஜுன், சௌபின், சத்யராஜ், ஷ்ருதி ஹாசன் உள்ளிட்டோரது கதாபாத்திரங்கள் ரஜினி கதாபாத்திரத்துக்கு நிகராக பேசுபொருளாகியுள்ளன.
இந்நிலையில், ஷ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் மிக யதார்த்தமாக நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 24 அன்று வெளியானது. இதில் கமல் ஹாசன் குறித்து ஷ்ருதி ஹாசன் பேசியுள்ளது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. மொழி குறித்து இருவரும் பேசிய உரையாடலில் ஷ்ருதி ஹாசன் இதனைத் தெரிவித்தார்.
சத்யராஜ் பேசுகையில், "உனக்கு (ஷ்ருதி ஹாசன்) நிறைய மொழிகள் தெரியும். பிறகு, மரபியல் ரீதியாகவே அப்பா எல்லா மொழிகளையும் வேகமாகக் கற்றுக்கொள்வார். ஒரு வங்காளப் படத்தில் நடித்தாரல்லவா. அதில் அவரே தான் பேசினார்" என்றார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஷ்ருதி ஹாசன் கூறியதாவது:
"அவர் வங்காள மொழியில் பேசினார். ஆனால், அவர் ஏன் வங்காள மொழியைக் கற்றுக்கொண்டார் எனத் தெரியுமா? அவருக்கு அப்போது அபர்ணா சென் மீது காதல். அபர்ணா செனைக் கவர வேண்டும் என்பதற்காகவே வங்காள மொழியை மொத்தமாகக் கற்றுக்கொண்டார். அவர் படத்துக்காகக் கற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே ஹே ராம் படத்தில் ராணி முகெர்ஜியின் பெயர் அபர்ணா. தற்போது தொடர்புபடுத்தி பாருங்கள். எனவே, அந்த ஒரு மொழியை மட்டும் அவர் மிகுந்த மனதுடன் கற்றுக்கொண்டார்" என்றார் ஷ்ருதி ஹாசன்.
ஷ்ருதி ஹாசன் மிகவும் யதார்த்தமாகக் கூறியதை, அனைவரும் ரசித்து சிரித்து பகிர்ந்து வருகிறார்கள்.
Kamal Haasan | Shruti Haasan | Aparna Sen | Sathyaraj | Coolie | Rajinikanth | Sun Pictures