கமல் ஹாசனின் கன்னட சர்ச்சை: மௌனம் கலைத்த ஷிவ ராஜ்குமார்
கமல் ஹாசன் கன்னட மொழி பற்றி பேசியது சர்ச்சையான நிலையில், ஷிவ ராஜ்குமார் அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 24 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் கன்னட நட்சத்திரம் ஷிவ ராஜ்குமார் கலந்துகொண்டார். ஷிவ ராஜ்குமாரை பாராட்டி பேசும்போது, அவருடைய தந்தைக்கும் தனக்குமான உறவு பற்றி கமல்ஹாசன் பேசினார். அப்போது "தமிழிலிருந்து பிறந்தது தான் உங்கள் மொழி" என கன்னடத்தைக் குறிப்பிட்டு கமல்ஹாசன் ஓர் இடத்தில் பேசியது சர்ச்சையானது.
கமல்ஹாசனின் இந்தப் பேச்சுக்கு கர்நாடகத்திலிருந்து கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. கட்சி வேறுபாடின்றி கண்டனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. கமல் ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகத்தில் கோரிக்கைகள் எழுகின்றன. அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்க முடியாது என்று கமல் ஹாசன் இதற்கு விளக்கமும் கொடுத்தார். இந்நிலையில் ஷிவ ராஜ்குமார் இச்சர்ச்சை பற்றி பேசியிருக்கிறார்.
"கமல் ஹாசன் எப்போதும் கன்னட மொழியைப் பற்றி உயர்வாகவே பேசியுள்ளார். பெங்களூரு பற்றி பெருமையாகப் பேசுவார். அவரைப் பார்த்து தான் நாம் வளர்ந்தோம். நான் கமல் ஹாசனின் மிகப் பெரிய ரசிகன்.
தந்தையின் ரசிகனாக அல்லாமல் கமல் ஹாசனின் ரசிகராக எப்படி இருக்க முடியும் என்று என்னிடம் கேட்பார்கள். அப்பா குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால், கமல் ஹாசன் அப்படி அல்ல. அவர் ஒரு நட்சததிரம். எப்போதுமே அவர் எனக்கு ஆதர்சமாக இருந்துள்ளார். உங்களுக்கெல்லாம் விருப்பமான நடிகர் இருப்பதைப்போல எனக்கு எப்போதுமே கமல் ஹாசன் விருப்பமான நடிகராக இருந்துள்ளார். ரசிகர்களுக்கு என்ன தேவை என்பதை மிகச் சரியாகப் புரிந்துகொள்வார். அதை எப்போதும் ரசிகர்களுக்காகக் கொடுக்கவும் செய்வார்.
அவருடைய நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்தது நம் அனைவருக்கும் பெருமைக்குரியது. நேற்று நம்முடன் இங்கிருந்தார். யாருக்காவது ஏதேனும் பிரச்னை இருந்திருந்தால், அவரிடம் நேரடியாகக் கேட்டிருக்கலாம். ஆனால், யாரும் கேட்கவில்லை. அப்போது ஏன் அமைதியாக இருந்தார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.
யாராவது பேசும்போது மட்டும் கன்னட மொழி மீதான அன்பு வெளிப்படக் கூடாது. கன்னட மொழி மீதான அன்பு என்பது மனதிலிருந்து எப்போதும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அனைத்து ஊடக சேனல்களையும் கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் நிகழும்போது மட்டும் ஊக்கப்படுத்தாதீர்கள். கன்னடம் மீதான பற்றை எல்லா நேரத்திலும் வெளிப்படுத்துங்கள்.
கன்னடம் மொழி மீதான நம் உறுதிப்பாடு வாழ்நாளுக்குமானதாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சண்டையிட நான் தயார். என் உயிரைக் கொடுக்கவும் தயார். கேமராக்கள் முன்பு மட்டும் கன்னடத்தைப் பற்றி உயர்வாகப் பேசுவது போதாது. செயல் தான் முக்கியம். கன்னட சினிமாவுக்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளீர்களா? உண்மையில் கன்னடம் வளர்ச்சியடைய வேண்டும் என விரும்பினால், உங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் ஆதரவைக் கொடுப்பது நம் கடமை.
இதையெல்லாம் நான் சொல்வதால் என்னைத் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். உங்களுடைய மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள். நான் சொல்வது சரியா அல்லது தவறா? உங்களுக்கு பதில் தெளிவாகிவிடும். கமல் ஹாசனைப் பொறுத்தவரை, நான் மேற்கொண்டு எதுவும் கூற விரும்பவில்லை. கன்னட சினிமாவுக்காக அவர் நிறைய பங்களிப்பைச் செலுத்தியுள்ளார்" என்றார் ஷிவ ராஜ்குமார்.