புற்றுநோயிலிருந்து குணமடைந்த ஷிவ ராஜ்குமார்!

"அனைத்துப் பரிசோதனைகளிலும் புற்று நோய் இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன."
புற்றுநோயிலிருந்து குணமடைந்த ஷிவ ராஜ்குமார்!
படம்: https://www.instagram.com/nimmashivarajkumar
1 min read

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஷிவ ராஜ்குமார், அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து அதிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ்குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஃப்ளோரிடாவிலுள்ள மியாமி புற்றுநோய் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு ஷிவ ராஜ்குமாருக்குப் புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த நிலையில், புற்றுநோயிலிருந்து தான் குணமடைந்துவிட்டதாகப் பதிவிட்டுள்ள ஷிவ ராஜ்குமார், வரும் மார்ச் முதல் புத்துணர்ச்சியுடன் மீண்டும் நிறைய படங்களில் பாடல்கள் பாட, நடனமாட, சண்டையிடத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இரட்டிப்புப் பலத்துடன் மீண்டு வருவதாக ஷிவ ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

சிறுநீர்ப்பை மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், சிறுநீரகம் மாற்றம் செய்ய வேண்டியத் தேவையில்லை, யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம் என விளக்கமளித்துள்ளார். ரசிகர்களின் ஆசியை என்றும் மறக்க மாட்டேன் என்று கூறிய அவர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்தார்.

ஷிவ ராஜ்குமார் மனைவி கீதா கூறுகையில், "அனைவருடையப் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. அனைத்துப் பரிசோதனைகளிலும் புற்று நோய் இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன. அவர் புற்றுநோயிலிருந்து முற்றிலுமாகக் குணமடைந்துவிட்டார்" என்றார்.

அருகிலிருந்து கவனித்துக் கொண்ட மனைவி குறித்து உருக்கமாகப் பதிவு செய்துள்ள ஷிவ ராஜ்குமார், "மனைவி கீதா எனக்குப் பக்கபலமாக இருந்தார். வேறு யாரிடமிருந்து இந்த அன்பு எனக்குக் கிடைக்கும் எனத் தெரியவில்லை. மகள் நிவேதிதாவும் என் அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டார்" என்று ஷிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in