
சண்முகபாண்டியன் நடித்துள்ள படை தலைவன் திரைப்படத்தின் வெளியீடு திரையரங்கு ஒதுக்கீடு சிக்கல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முகபாண்டியன் நடித்துள்ள படம் படை தலைவன். சகாப்தம், மதுர வீரன் படங்களுக்குப் பிறகு சண்முகபாண்டியன் நடித்துள்ள படம் படை தலைவன். இப்படத்த அன்பு இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சண்முகபாண்டியனுடன் கஸ்தூரி ராஜா, கருடன் ராம், யாமினி சந்தர் உள்பட பலர் நடித்துள்ளார்கள். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. சசிகுமார், ஏ.ஆர். முருகதாஸ், விஜய பிரபாகரன், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். சண்முகபாண்டியனுக்காக ரமணா 2 எடுக்கத் தயார் என்றும் ஏ.ஆர். முருகதாஸ் பேசினார்.
இந்நிலையில், இப்படம் மே 23 அன்று திரையரங்கு வெளியீட்டுக்குக் காத்திருந்த நிலையில், பட வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக சண்முகபாண்டியன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
"அனைவருக்கும் வணக்கம். படை தலைவன் திரைப்படம் மே 23 அன்று வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டுத் தேதியை விரைவில் உறுதி செய்து, அறிவிக்கவுள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி" என்று சண்முகபாண்டியன் இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் அறிவித்துள்ளார்.